ஸ்மித், கம்மின்ஸ் அபாரம்.. படுமோசமா ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து.. ஆஷஸை தக்கவைத்து ஆஸி., அணி சாதனை

By karthikeyan VFirst Published Sep 9, 2019, 10:14 AM IST
Highlights

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-1 என முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளதால், இந்த தொடரை இனிமேல் ஆஸ்திரேலிய அணி இழப்பதற்கு வாய்ப்பில்லை. 

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 497 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 196 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸை 186 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் வார்னர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மார்கஸ் ஹாரிஸ் மற்றும் லபுஷேனும் சோபிக்கவில்லை. ஆனால் வழக்கம்போலவே ஸ்மித் அபாரமாக ஆடினார். இந்த போட்டியில் வெல்ல வேண்டுமானால் விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை முடிந்தளவிற்கு விரைவில் பேட்டிங் ஆட விட வேண்டும் என்பதை உணர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் ஸ்மித். 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். 82 ரன்களை குவித்து ஸ்மித் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸிலும் சதமடித்திருக்கலாம். ஆனால் வெற்றியை கருத்தில்கொண்டு அணிக்காக ஆடினார். நான்காம் நாள் ஆட்டத்தில் விரைவில் முடிந்தவரை ரன் குவித்துவிட்டு இங்கிலாந்தை ஆடவிட்டால்தான் வெற்றி பெற முடியும் என்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். 

6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ய, 383 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் அடித்திருந்தது. 

கடைசி நாளில் ஆல் அவுட்டாகிவிடாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்னிங்ஸை தொடர்ந்தனர் டென்லியும் ராயும். இருவரும் நன்றாகவே ஆடினர். எனினும் இருவரில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 66 ரன்களை சேர்த்தனர். ஜேசன் ராய் 31 ரன்களில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பென் ஸ்டோக்ஸும் சோபிக்கவில்லை. அவர் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்துநின்று ஆடி அரைசதம் அடித்த டென்லியும் 53 ரன்களில் அவுட்டாக, அதன்பின்னர் இங்கிலாந்து அணி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சியெல்லாம் தோல்விலேயே முடிந்தது. பேர்ஸ்டோ 25 ரன்களிலும் பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிய, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 197 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் பாட் கம்மின்ஸும் அபாரமாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பும் அளப்பரியது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் இவரும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

இந்த வெற்றியின் மூலம் 2-1 என முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இன்னும் ஒரு போட்டியே இருப்பதால் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை இழப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை இழக்காமல் தக்கவைத்த பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. 
 

click me!