
ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்தது. இறுதிப்போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அலைஸா ஹீலி மற்றும் ஹெய்ன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்களை குவித்தனர். ஹெய்ன்ஸ் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மூனியும் ஹீலியுடன் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினார்.
மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஹீலி சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் அருமையாக பேட்டிங் ஆடி 170 ரன்களை குவித்தார் ஹீலி. மூனி 62 ரன்கள் அடித்தார். ஹீலி, ஹெய்ன்ஸ், மூனியின் சிறப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 356 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.
357 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து மகளிர் அணியில் நடாலி சைவர் மட்டுமே அபாரமாக பேட்டிங் ஆடி 148 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. இதையடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி உலக கோப்பையை வென்றது.