தனி ஒருவனாக போராடிய ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்.. ஆஸ்திரேலியாவிடமும் மண்ணை கவ்விய இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Jun 26, 2019, 10:05 AM IST
Highlights

இலங்கை அணியிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியிடமும் படுதோல்வி அடைந்தது.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து, தொடர் தோல்விகளை தழுவிவருகிறது. இலங்கைக்கு எதிராக தோற்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை தழுவியது.

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் வார்னரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 123 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கவாஜா, 23 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடி சதமடித்த கேப்டன் ஃபின்ச், சதமடித்த மாத்திரத்திலேயே 100 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஸ்மித் அதிரடியாக ஆடி 38 ரன்கள் அடித்தார். மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். எனினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 285 ரன்கள் அடித்தது. 

286 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் பெஹ்ரெண்டோர்ஃப் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின்னர் ஜோ ரூட், இயன் மோர்கன் ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ மறுமுனையில் நின்று நம்பிக்கையளித்தார். ஆனால் அவரும் ஒரு தவறான ஷாட்டை ஆடி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

அதன்பின்னர் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சற்று நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றார். ஆனால் அவரும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டோக்ஸுடன் வோக்ஸ் ஜோடி சேர்ந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்டோக்ஸ் களத்தில் நிலைத்து சூழலுக்கு ஏற்ப சிறப்பாக ஆடி நம்பிக்கையளித்தார். நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், அதேநேரத்தில் அடிக்கவும் தயங்கவில்லை. மேக்ஸ்வெல் வீசிய ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். கம்மின்ஸின் ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவ்வாறு அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடித்தும் கொண்டிருந்தார். 

ஸ்டோக்ஸ் களத்தில் நின்றவரை இங்கிலாந்து அணி நம்பிக்கையுடன் இருந்தது. 89 ரன்கள் அடித்திருந்த ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான யார்க்கரில் 37வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை தகர்ந்தது. வோக்ஸ், மொயின் அலி, ஆர்ச்சர், அடில் ரஷீத் ஆகியோர் ஆட்டமிழக்க, 44.4 ஓவரில் 221 ரன்களுக்கே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து, அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அல்லது ஒரு போட்டியிலாவது வென்றாக வேண்டும். இங்கிலாந்து அணி எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்தியாவுடனும் மற்றொன்றில் நியூசிலாந்துடனும் மோதுகிறது. எனவே இங்கிலாந்து அணிக்கு அடுத்த 2 போட்டிகளுமே கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். 
 

click me!