ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடுமையாக போராடி தோற்ற வங்கதேசம்

By karthikeyan VFirst Published Jun 20, 2019, 11:53 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி கடுமையாக போராடி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

நாட்டிங்காமில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து வார்னரும் ஃபின்ச்சும் களமிறங்கினர். 

வார்னர் - ஃபின்ச் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், வங்கதேச அணிக்கு எதிராக இருவருமே சிறப்பாக ஆடினர். வங்கதேச அணியின் பவுலிங்கை ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய வார்னரும் ஃபின்ச்சும் பின்னர் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்தனர். முதல் சில ஓவர்கள் பொறுமையாக ஆடினர். களத்தில் நிலைத்துவிட்டதும் அதிரடியை தொடங்கினர். 

வார்னர் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஃபின்ச்சும் அரைசதம் அடித்தார். ஆனால் ஃபின்ச் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெறும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். வார்னர் சிறப்பாக ஆட, உஸ்மானும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கவாஜாவும் சிறப்பாக ஆடினார்.

வார்னர் சதமடித்ததை அடுத்து கவாஜாவும் அரைசதம் அடித்தார். சதமடிக்கும் வரை பொறுமையாக ஆடிய வார்னர், அதன்பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 147 பந்துகளில் 166 ரன்களை குவித்த வார்னர், 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல், 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜாவும் 72 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நன்றாக செட்டில் ஆன வீரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் பெரியளவில் ரன்கள் கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் ஸ்டோய்னிஸ் 2 பவுண்டரிகள் அடித்ததால் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 381 ரன்களை குவித்தது.

382 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக தொடங்கினர். ஆனால் சௌமியா சர்க்கார் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் தமீம் இக்பாலும் ஷாகிப் அல் ஹாசனும் சிறப்பாக ஆடினர். இந்த தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷாகிப் அல் ஹாசன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் தமீம் இக்பாலும் முஷ்ஃபிகுர் ரஹீமும் அபாரமாக ஆடினர். அரைசதம் அடித்து களத்தில் நிலைத்த தமீம் இக்பால், அதிரடியை தொடங்க வேண்டிய நேரத்தில் 62 ரன்களில் ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் வங்கதேச அணி போராட்டத்தை விடவில்லை. இக்பாலின் விக்கெட்டுக்கு பிறகு தான் தீவிரமாக போராட ஆரம்பித்தனர். முஷ்ஃபிகுரும் மஹ்மதுல்லாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். முஷ்ஃபிகுரை தொடர்ந்து, அதிரடியாக ஆடிய மஹ்மதுல்லாவும் அரைசதம் அடித்தார். ஆனால் தேவைப்படும் ரன்ரேட் மிக அதிகமாக இருந்ததால் போட்டி ரொம்ப கடினமானது. 

கண்டிப்பாக பெரிய ஷாட் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த மஹ்மதுல்லா 69 ரன்களில் குல்டர்நைலின் பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வங்கதேசத்தின் தோல்வி உறுதியடைந்தது. ஆனால் ஒருமுனையில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீம் சதமடித்தார். இதையடுத்து 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 333 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

click me!