டேவிட் வார்னர் - கவாஜா அபார பேட்டிங்.. இமாலய ஸ்கோரை குவித்த ஆஸ்திரேலியா.. வங்கதேச அணிக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jun 20, 2019, 7:41 PM IST
Highlights

சதமடிக்கும் வரை பொறுமையாக ஆடிய வார்னர், அதன்பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 147 பந்துகளில் 166 ரன்களை குவித்த வார்னர், 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 381 ரன்களை குவித்தது.

நாட்டிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து வார்னரும் ஃபின்ச்சும் களமிறங்கினர். 

வார்னர் - ஃபின்ச் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், வங்கதேச அணிக்கு எதிராக இருவருமே சிறப்பாக ஆடினர். வங்கதேச அணியின் பவுலிங்கை ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய வார்னரும் ஃபின்ச்சும் பின்னர் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்தனர். முதல் சில ஓவர்கள் பொறுமையாக ஆடினர். களத்தில் நிலைத்துவிட்டதும் அதிரடியை தொடங்கினர். 

வார்னர் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஃபின்ச்சும் அரைசதம் அடித்தார். ஆனால் ஃபின்ச் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெறும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். வார்னர் சிறப்பாக ஆட, உஸ்மானும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கவாஜாவும் சிறப்பாக ஆடினார்.

வார்னர் சதமடித்ததை அடுத்து கவாஜாவும் அரைசதம் அடித்தார். சதமடிக்கும் வரை பொறுமையாக ஆடிய வார்னர், அதன்பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 147 பந்துகளில் 166 ரன்களை குவித்த வார்னர், 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல், 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜாவும் 72 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நன்றாக செட்டில் ஆன வீரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் பெரியளவில் ரன்கள் கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் ஸ்டோய்னிஸ் 2 பவுண்டரிகள் அடித்ததால் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 381 ரன்களை குவித்தது.
 

click me!