
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில் இலங்கையும், வங்கதேச அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. சிக்சர் மழை பொழிந்த தசுன் சனகா 6 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 37 பந்தில் 64 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 25 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் சார்பில் முஸ்தாபிசுர் மூன்று விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்பு சவாலான இலக்கை நோக்கி வங்க தேச அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 21 வயதான துனித் வெல்லலகே விளையாடினார். துனித் வெல்லலகேவின் தந்தை சுரங்கா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் கடைசி லீக் போட்டி நடந்து கொண்டிருந்தபோது காலமானார்.
அந்த போட்டியில் விளையாடி முடித்து வந்த துனித் வெல்லலகேவிடம் இந்த தகவலை சனத் ஜெயசூர்யா சொல்லி அவரை ஆறுதல்படுத்தினார். தந்தையை இழப்பை தாங்க முடியாத துனித் வெல்லலகே உடனடியாக நாடு திரும்பி தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார்.
இந்நிலையில், தந்தை இறந்த வெறும் 2 நாட்களில் இலங்கையில் இருந்து துபாய் திரும்பிய அவர் இன்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். பேட்டிம்ங்கில் மிகப்பெரும் இழப்பை சந்தித்து இருந்தாலும் நாட்டுக்காக விளையாடுவது முக்கியம் என கருதி அணிக்கு திரும்பிய துனித் வெல்லலகேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கை வீரர்கள் மௌன அஞ்சலி
முன்னதாக இன்று இலங்கை, வங்கதேசம் போட்டி தொடங்கியபோது, இலங்கை அணி வீரர்கள் துனித் வெல்லலகேவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் துக்கம் அனுசரிக்கும் விதமாக இலங்கை அணி வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் கைகயில் கருப்பு அட்டை அணிந்து விளையாடினார்கள்.