அஷ்டன் அகர் ஹாட்ரிக்.. ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த தென்னாப்பிரிக்கா.. சொந்த மண்ணில் படுமோசமான தோல்வி

By karthikeyan VFirst Published Feb 22, 2020, 10:55 AM IST
Highlights

முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 
 

ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் டி20 போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 196 ரன்களை குவித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் கேப்டன் ஃபின்ச்சும் ஸ்மித்தும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய கேப்டன் ஃபின்ச் 27 பந்தில் 42 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த மேத்யூ வேட், 11 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்து அவுட்டானார். 

அவரை தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்மித்தும் 32 பந்தில் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, அஷ்டன் அகர் ஆகியோர் ஓரளவிற்கு ஆடி ஸ்கோரை உயர்த்த, 20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 196 ரன்களை குவித்தது. 

197 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, யாருமே எதிர்பார்த்திராத வகையில், சொந்த மண்ணில் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் குயிண்டன் டி காக்கும் வாண்டெர் டசனும் இறங்கினர். டி காக் வெறும் 2 ரன்னிலும் டசன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

ஜேஜே ஸ்மட்ஸை 7 ரன்களில் கம்மின்ஸ் வீழ்த்த, அதிரடி வீரர் டேவிட் மில்லரை 2 ரன்னில் ஆடம் ஸாம்பா வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுமுனையில் நின்ற டுப்ளெசிஸும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். டுப்ளெசிஸை 8வது ஓவரின் நான்காவது பந்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய ஸ்பின்னர் அஷ்டன் அகர், அடுத்த பந்தில் ஃபெலுக்வாயோவையும் அதற்கடுத்த பந்தில் ஸ்டெய்னையும் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி 8வது ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டார். 

8வது ஓவரில் அகர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதை அடுத்து வெறும் 44 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. அதன்பின்னர் ரபாடா சிறப்பாக பேட்டிங் ஆடி 22 ரன்கள் சேர்த்ததால், அந்த அணி 89 ரன்களையாவது எட்டியது. பிஜியோனையும் லுங்கி இங்கிடியையும் அகர் வீழ்த்த, ரபாடாவை ஸாம்பா வீழ்த்தினார். இதையடுத்து வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டான தென்னாப்பிரிக்க அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

ஹாட்ரிக்குடன் சேர்த்து மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த அஷ்டன் அகர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 
 

click me!