இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை தோனி ஆடிவிட்டார்..!

By karthikeyan VFirst Published Aug 2, 2020, 4:11 PM IST
Highlights

தோனியின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார்.

தோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பைக்கு பின்னர் ஓய்வு பற்றி வாய் திறக்காத தோனி, அதன்பின்னர் இந்திய அணியிலோ அல்லது எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த விக்கெட் கீப்பர் உருவாக்கப்பட்டுவருகிறார். ஆனாலும் தோனி தனது ஓய்வு நிலைப்பாடு குறித்து மௌனம் காத்துவருகிறார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, அக்டோபரில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் முனைப்பில் தோனி இருந்ததாக தெரிந்தது. ஆனால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அக்டோபர் 18ம் தேதி தொடங்கவிருந்த டி20 உலக கோப்பை ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் தோனி ஆட வாய்ப்பில்லை. 

அதனால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் அவர் இந்திய அணிக்காக ஆட வாய்ப்பில்லை என்றும் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, எனக்கு தெரிந்தவரை, தோனி அவரது இந்திய அணிக்காக அவரது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் ஆடிவிட்டார் என்றே நினைக்கிறேன். இனிமேல் தோனி நிரூபிப்பதற்கு எதுவுமில்லை. தோனி அவரது ஓய்வைப்பற்றி எதுவும் அறிவிக்காததால், தோனியின் அதைப்பற்றி மீடியாக்களும் நாமும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரது மனதில் இருப்பதை அவர்தான் அறிவிக்க வேண்டும் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

தோனி கடைசியாக இந்திய அணிக்காக, 2019 உலக கோப்பையின் அரையிறுதி போட்டியில் ஆடினார். அதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டி என்பது நெஹ்ராவின் கருத்து. இனிமேல் அவர் ஆட வாய்ப்பில்லை என்றே நெஹ்ரா கருதுகிறார். 
 

click me!