என்னை கொஞ்சம்கூட மதிக்கல.. நான் இனிமேல் அந்த டி20 லீக் அணியில் ஆடமாட்டேன்.. கோபத்தில் வெளியேறிய ஆண்ட்ரே ரசல்

By karthikeyan VFirst Published May 4, 2020, 10:29 PM IST
Highlights

ஆண்ட்ரே ரசல் தான் ஆடியதிலேயே படுமோசமான டி20 லீக் அணியின் பெயரை தெரிவித்துள்ள ஆண்ட்ரே ரசல், அந்த அணியில் இனிமேல் ஆட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கெய்ல், ரசல், பிராவோ, பொல்லார்டு ஆகிய வீரர்களுக்கு உலகம் முழுதும் நடத்தப்படும் அனைத்து டி20 லீக் தொடர்களிலுமே பெரிய டிமாண்ட் இருக்கிறது. அதிரடி வீரர்களான அவர்களை தங்களது அணிகளில் எடுக்க, அனைத்து அணிகளுமே ஆர்வம் காட்டும். 

ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், கனடா பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், மஸான்ஸி டி20 லீக், வங்கதேச பிரீமியர் லீக் என உலகம் முழுதும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடிவருகின்றனர். ரசலும் அப்படித்தான்.. அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகிறார். 

எத்தனை டி20 லீக் தொடர்களில் ஆடினாலும், வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே ஆட விரும்புவது ஐபிஎல்லில்தான். ஏனெனில் பணம், பெயர், புகழ், பிரபலம், ஆதரவு என அனைத்து வகையிலும் அவர்களுக்கு ஐபிஎல்லில் கிடைப்பது போல வேறு எந்த டி20 லீக்கிலும் எந்த நாட்டிலும் கிடைக்காது. அதனால் அனைத்து வெளிநாட்டு வீரர்களுமே ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில், ஆண்ட்ரே ரசல் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது கெரியர் முடியும் வரை ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக ஆட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். கேகேஆர் அணியும் ரசிகர்களும் அளிக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் வியந்து புகழ்ந்திருந்தார். 

அதேவேளையில் அவர்களது சொந்த நாட்டில் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக்கில், அவர் ஆடும் ஜமைக்கா தல்லாவாஸ் அணி நிர்வாகம் அவரை நடத்தும் முறையையும், அந்த அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த அணி மீது கெய்லும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நிலையில், ரசலும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதுகுறித்து பேசியுள்ள ரசல், டி20 லீக் தொடர்களில் நான் ஆடியதிலேயே வித்தியாசமான மற்றும் மோசமான அணி ஜமைக்கா தல்லாவாஸ் தான். அவர்கள் என்னை மதிப்புடன் நடத்தவில்லை. ஏதோ அறிமுக போட்டியில் ஆடும் வீரரை போல நடத்தினர். கொஞ்சம் கூட மதிக்கவேயில்லை. அந்த அணியை நான் ஏற்கனவே வழிநடத்தியிருக்கிறேன். ஆனால் அந்த மரியாதையைக்கூட எனக்கு அளிக்கவில்லை. நான் எது சொன்னாலும் மதிப்பதில்லை. முதல் தர கிரிக்கெட்டில் ஒருசில போட்டிகளில் ஆடிய வீரரை நடத்துவதுபோல் நடத்தினர். நமது கருத்துக்கு மதிப்பே இல்லை. 

அணியில் யாரை தக்கவைத்து கொள்ளப்போகிறீர்கள்? யார் யாரை புதிதாக எடுக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால் பதில் கூட சொல்லமாட்டார்கள். எனவே நான், நமக்கென்ன என்று விட்டுவிட்டேன். இதுதான் அந்த அணியில் நான் ஆடும் கடைசி சீசனாக இருக்கும் என நினைக்கிறேன் என்று ரசல் தெரிவித்துள்ளார்.
 

click me!