உலக கோப்பை கிரிக்கெட்டின் தரத்தை தாறுமாறா கேள்வி கேட்ட அக்தர்

By karthikeyan VFirst Published Jul 5, 2019, 2:02 PM IST
Highlights

உலக கோப்பை கிரிக்கெட்டின் தரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

உலக கோப்பை கிரிக்கெட்டின் தரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை தொடர்ந்து எஞ்சிய இரண்டு இடங்களுக்கான போட்டி கடுமையாக இருந்தது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்தியா அல்லது நியூசிலாந்து அணிகளில் ஏதாவது ஒரு அணி, இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தால் பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இரண்டு அணிகளுமே இங்கிலாந்திடம் தோற்றதால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

தற்போது நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது. 9 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றால் 11 புள்ளிகளை பெறும். ஆனாலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணி தான் அரையிறுதிக்குள் நுழையும். பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட்டின் தரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள அக்தர், உலக கோப்பை கிரிக்கெட்டின் தரம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்த உலக கோப்பையில் கிரிக்கெட்டின் தரம் மிகவும் கீழாக சென்றுவிட்டது. பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் அடிக்கிறார்கள். பவுலர்களிடம் போட்டித்திறனே இல்லை. 1990கள், 2000ம் ஆண்டுகளில் இருந்த பவுலிங்கின் தரம் இப்போது இல்லை. 3 பவர்ப்ளே வைத்துள்ளார்கள்; 2 பந்துகளை பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை குவிக்கமுடியும். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் ஆடிய விதம் என்னை ரொம்ப அதிருப்தியடைய செய்தது. இப்போதுதான் கிரிக்கெட் கற்றுக்கொள்பவர்களை போல நியூசிலாந்து வீரர்கள் ஆடினார்கள். எந்தவொரு போராட்டமுமின்றி அப்படியே சரணடைந்தார்கள். நியூசிலாந்து வீரர்கள் தரமான கிரிக்கெட்டை ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டி ரத்து ஆகியவை தான் பாகிஸ்தான் தொடரைவிட்டு வெளியேற காரணம். இதற்கு யாரையும் பொறுப்பேற்க சொல்ல முடியாது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கௌரவமான வெற்றியை பெற வேண்டும் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 
 

click me!