
இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்கா சென்று பயோ பபுளில் இருக்க வேண்டியிருப்பதால், இந்திய அணி வரும் 16ம் தேதி இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புறப்படுகிறது.
அதற்கு முன்பாக மும்பையில் நேற்று(டிசம்பர் 12) முதல் இந்திய வீரர்கள் பபுளில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரஹானேவிற்கு இடம் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் இருந்தது. ஏனெனில் அவரது அண்மைக்கால தொடர்ச்சியாக சொதப்பிவரும் அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடியதால், இந்திய டெஸ்ட் அணியில் ரஹானேவின் இடம் இனிமேல் சந்தேகம் என்று கருதப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். இதுவரை துணை கேப்டனாக இருந்துவந்த ரஹானேவிடமிருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
எனவே இந்திய டெஸ்ட் அணியின் ஆடும் லெவனில் ரஹானேவின் இடம் சந்தேகமாக இருந்தது. இந்நிலையில், கேப்டன் விராட் கோலி பயோ பபுளில் இணையாததுடன், ஃபோனையும் அணைத்து வைத்திருப்பதால், அவரை பிசிசிஐயால் தொடர்புகொள்ள முடியவில்லை. பபுளில் இல்லாத கோலி தென்னாப்பிரிக்கா செல்வது கடினம். இந்நிலையில், துணை கேப்டன் ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எனவே அஜிங்க்யா ரஹானேவிற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஒருவேளை ரோஹித்தும் கோலியும் ஆடியிருந்தால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் இருப்பதால் ரஹானே மிடில் ஆர்டர் வீரராக அணியில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் ரோஹித்தும் கோலியும் ஆடமுடியாத சூழல் உருவாகியிருப்பதால், ரஹானேவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதுடன், அவரே இந்திய அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.