
ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு சிஎஸ்கே அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி 4 முறை சிஎஸ்கேவிற்கு கோப்பையை வென்று கொடுத்த தோனி, 15வது சீசனுக்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகினார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
இந்த சீசனில் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடிவருகிறது. ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசன் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக தொடங்கவில்லை. முதல் 2 போட்டிகளிலுமே தோல்வியடைந்தது சிஎஸ்கே. கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தும், அந்த ஸ்கோருக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
தோனி கேப்டன்சியிலிருந்து விலகினாலும், சிஎஸ்கே அணியை பொறுத்தமட்டில் முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பார் என்பதும், களத்தில் இக்கட்டான, நெருக்கடியான சூழல்களில் கேப்டன் ஜடேஜாவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் அதை மிகவும் நெருக்கடியான அல்லது தேவைப்படும் நேரங்களில் மட்டும் செய்தால் நல்லது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஃபீல்டிங் செட்டப் செய்தார்; வீரர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார். கேப்டன் ஜடேஜா பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். தோனியின் ஆதிக்கம் அதிகமிருந்ததை கண்ட முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அஜய் ஜடேஜா, சிஎஸ்கே - லக்னோ இடையேயான போட்டியில் நான் கண்டது மிகத்தவறான விஷயம். தோனிக்கு என்னை விட பெரிய ரசிகர் இருக்கமுடியாது. அவ்வளவு பெரிய ரசிகர் நான். அவரது நிதானத்திற்கு நான் ரசிகர். மிகவும் முக்கியமான நாக் அவுட் போட்டி அல்லது நெருக்கடியான சூழலில் தோனி ஆலோசனை வழங்கி வழிநடத்துவதில் பிரச்னையில்லை. ஆனால் இந்த சீசனில் வெறும் 2வது போட்டிதான் இது. அதில் அவர் வழிநடத்துவது என்பது சரியல்ல.
தோனியை விட பெரிய கேப்டன் கிடையாது. ஆனால் கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டு, வேறு ஒருவரை கேப்டனாக நியமித்துவிட்டால், அவருக்கு வழிவிட வேண்டும். மீண்டும் நீங்களே வழிநடத்துவது என்பது அவருக்கு(ஜடேஜா) பின்னோக்கி தள்ளும். அவரது(ஜடேஜா) நம்பிக்கையை குறைக்கும் என்று அஜய் ஜடேஜா தெரிவித்தார்.