தொடரும் தோல்விகள்… டிவிட்டரில் மரண பங்கமாய் கலாய்க்கும் பாக்., ரசிகர்கள்.. அலறியடித்து ஓடும் இந்தியர்கள்..!

By manimegalai aFirst Published Nov 1, 2021, 9:20 AM IST
Highlights

சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்காமல் போக மிக முக்கிய காரணமே ஐ.பி.எல். தொடர் தான். ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்காமல் போக மிக முக்கிய காரணமே ஐ.பி.எல். தொடர் தான். ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், பாகிஸ்தானை தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரன ஆட்டத்திலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது நாட்டு மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் நீடிக்கும் தீராப்பகையை போலவே, கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வெளியேற்றியது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் தோற்கடித்தது என நியூஸிலாந்து அணியும் இந்திய ரசிகர்களை கொதிப்படையவே செய்திருந்தது. அதற்கெல்லாம் நேற்றைய ஆட்டத்தில் பழிதீர்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்துள்ளனர் இந்திய அணி வீரர்கள்.

விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றாலும், ஐ.சி.சி. தரவரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு அணி, உலகளவில் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெறும் ஒரு அணி, நூறு கோடிக்கும் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய அணி, மிக முக்கியமான ஆட்டங்களில் நிராயுதபானியாக வீழ்வது இந்தியர்களை கிரிக்கெட்டையே வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. போட்டி அட்டவணைகள் கூட இந்திய அணிக்கே சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், ஒரு வார காலம் பயிற்சிக்கு நேரமிருந்தும் இந்திய வீரர்கள் நேற்றைய தினம் களத்தில் செயல்பட்ட விதம் பாகிஸ்தான் ரசிகர்களை தவிர ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கோபமடையச் செய்திருக்கிறது.

ஆடும் லெவனில் மற்ற பத்து வீரர்களும் சொதப்பினாலும், ராசியில்லாத கேப்டன் என்று மீண்டும், மீண்டும் விராத் கோலியே குறிவைக்கப்படுகிறார். இந்திய வீரர்களிடம் ஒட்டிக்கொண்டுள்ள பயமே அவர்களை தோல்வியின் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக கேப்டன் விராத் கோலியும், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய வீரர்கள் துணிச்சலுடன் செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

தொடர் தோல்விகளால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் அணியாக உள்ள பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் இந்தியர்களை ஏளனம் செய்ய தொடங்கிவிட்டனர். வாழ்த்துகள் இந்தியா (Congratulations India) என பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிடும் டிவீட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் லாக் அவுட் செய்துவிட்டு தெறித்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒருபுறம் விராத் கோலி குறிவைத்து தாக்கப்படுவதை போலவே, மெண்டாராக நியமிக்கப்பட்ட தல தோனியும் இணைய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் ஒரு வீரர் அடித்த சிக்சர்களை கூட ஒட்டுமொத்த இங்கிய அணியும் அடிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். அமீரகத்தில் போர் அடித்துவிட்டதால் நாடு திரும்ப இந்திய வீரர்கள் இப்படி சொதப்புகிறார்களா என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரில் பணம் அதிகம் கிடைப்பதால் இந்திய அணி வீரர்கள், அதில் மட்டுமே சிறப்பாக செயல்பட நினைப்பதாக குற்றஞ்சாட்டும் ரசிகர்கள், ஐ.பி.எல். தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏதாவது ஒரு சில வீரர்கள் சரியாக செயல்படாமல் இருந்தால் அவர்கள் பெயர்களை குறிப்பிட்டு ரசிகர்கள் வசைபாடி அந்த வீரர்கள் டிவிட்டரில் டிரெண்டாவது வாடிக்கையாகும். ஆனால் நேற்றை ஆட்டத்தில் 11 வீரர்கள், அணி நிர்வாகம் என அனைத்து தரப்புமே சொதப்பியதால் டிவிட்டர் முழுவதும் இந்திய அணி வீரர்கள் பெயர்கள் மற்றும் மெண்டார் தோனியின் பெயரும் டிரெண்டிங்கில் உள்ளது. எஞ்சியிருக்கும் ஆட்டங்களில் அதிரடி ஆட்டத்திற்கு திரும்பி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவதே விமர்சனங்களுக்கான பதிலடியாக இருக்கும்.

click me!