
டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கேப்டனாக ரஷித்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் குல்புதீன் நயீப் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கும் அணிக்கு திரும்பியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான சமீபத்திய தொடரைத் தவறவிட்ட ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஆப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பார். மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, ஏ.எம். கசன்ஃபருக்குப் பதிலாக முஜீப் உர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கசன்ஃபர், இந்தத் தொடருக்கான ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே அணி, ஜனவரி 19ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கும்.
"குல்புதீன் நயீப் ஒரு பெரிய போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர், அவரது வருகை எங்கள் அணிக்கு ஊக்கமளிக்கிறது. நவீன் உல் ஹக் மீண்டும் வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் வேகப்பந்து வீச்சின் தரத்தை மேம்படுத்துகிறது. முஜீப்பிற்கு வழிவிடும் வகையில், ஏ.எம். கசன்ஃபரை பிரதான அணியில் இருந்து வெளியேற்றுவது கடினமான முடிவாக இருந்தது" என்று ஆப்கான் லைமை தேர்வாளர் அஹ்மத் ஷா சுலிமான்கில் தெரிவித்தார்.
2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சென்ற ஆப்கான்
கடந்த 2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த முறையும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க ஆப்கானிஸ்தான் ரெடியாக உள்ளது. டி20 உலகக் கோப்பை 2026-ல் ஆப்கானிஸ்தான் 'குரூப் டி'-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி பிப்ரவரி 8 அன்று சென்னையில் நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியைத் தொடங்குகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி
டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி: ரஷித் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், அப்துல்லா அஹ்மத்சாய், செடிக்குல்லா அடல், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ரஹ்மானுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக், முகமது இஷாக், ஷஹிதுல்லா கமல், முகமது நபி, குல்புதீன் நயீப், அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், தர்விஷ் ரசூலி, இப்ராஹிம் சத்ரான்.
ரிசர்வ் வீரர்கள்: ஏ.எம். கசன்ஃபர், இஜாஸ் அஹ்மத்சாய் மற்றும் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி