
திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் அபாரமான அரைசதம் மற்றும் கடைசி ஓவரில் அருந்ததி ரெட்டியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
ஹர்மன்ப்ரீத் கவுர் 43 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். அருந்ததி ரெட்டி கடைசிக் கட்டத்தில் 11 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்கள் அடித்து அணி 170 ரன்கள் கடக்க உதவினார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி, ராஷ்மிகா சேவ்வண்டி, சமாரி அட்டப்பட்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்பு பெரிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி வீராங்கனை இமேஷா துலானி 39 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஹாசினி பெரேரா 42 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் விளாசினார். ஆனால் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பியதால் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது.
இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்தியா
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி, வைஷ்ணவி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ஸ்ரீ சரணி மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த டி20 தொடரில் 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் இலங்கையை பந்தாடி ஒயிட்வாஷ் செய்துள்ளது.