
Abhishek Sharma Batting: இந்திய அணிக்காக சமீபத்திய போட்டிகளில் சரியாக விளையாடாததால் விமர்சனங்களைச் சந்தித்து வந்தார் அபிஷேக் சர்மா. கடந்த ஆறு சர்வதேச டி20 போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். குறிப்பாக, 2026 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் (India Tour of Zimbabwe, 2026) நடந்த மூன்று போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், இந்த மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வந்துள்ளார் அபிஷேக் சர்மா. ஞாயிற்றுக்கிழமை அமிர்தசரஸில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த பஞ்சாப் இன்டர்-டிஸ்ட்ரிக்ட் சீனியர் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் (Punjab Inter-District Men's Senior One-Day Tournament) தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமிர்தசரஸ் அணிக்காக தரண் தரண் அணிக்கு எதிராக விளையாடிய அபிஷேக், வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் விளாசினார். அவரது இந்த இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும், 25 சிக்ஸர்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 256.04 ஆக இருந்தது. அபிஷேக்கின் இந்த அபாரமான பேட்டிங்கால், அமிர்தசரஸ் அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தரண் தரண் அணிக்கு எதிரான இந்த போட்டியில், அபிஷேக்கின் அதிரடி ஆட்டத்தால், அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 533 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக், அபய் சவுத்ரியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 305 ரன்கள் சேர்த்தார். அபய் சவுத்ரி 85 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். இந்த வலுவான தொடக்கத்தால், மிடில் ஆர்டரில் வந்த அபினவ் சர்மா (51), சாஹில் சர்மா (37), மற்றும் சுமித் சர்மா (23*) ஆகியோர் ரன் குவிக்க, அணி 500 ரன்களைக் கடந்தது.
534 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய தரண் தரண் அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அணியின் அர்ஷ்தீப் சிங் 108 ரன்களும், மன்பிரீத் சிங் சந்து 62 ரன்களும் எடுத்துப் போராடினர். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.
ABHISHEK SHARMA MAKES A STATEMENT 🔥
- He smashed 233 runs from just 91 balls with 15 fours & 25 sixes against Tarn Taran Men Sr in the One Day District match pic.twitter.com/QV4k83Oo5e— Johns. (@CricCrazyJohns) August 2, 2026
பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் அபிஷேக் அசத்தினார். தனது இடது கை சுழற்பந்து வீச்சில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் 26 ரன்கள் எடுத்திருந்த கரண்வீர் சிங் தில்லோனை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர், சதம் அடித்த அர்ஷ்தீப்பையும் பெவிலியனுக்கு அனுப்பினார். இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் பந்துவீசி 71 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.