கேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து கங்குலியை கங்கனம் கட்டி தூக்கிய அந்த நபர் யார்..?

By karthikeyan VFirst Published Jul 5, 2020, 4:54 PM IST
Highlights

ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து 2009 சீசனில் கங்குலி நீக்கப்பட்ட சம்பவம் குறித்த பின்னணியை பகிர்ந்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து 2009 சீசனில் கங்குலி நீக்கப்பட்ட சம்பவம் குறித்த பின்னணியை பகிர்ந்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு இருந்த அணி கேகேஆர். அதற்கு காரணம், கங்குலி தலைமையிலான கேகேஆர் அணியில் ரிக்கி பாண்டிங், ஷோயப் அக்தர், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஆடியதும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் என்பதாலும், கேகேஆர் அணியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. 

ஆனால் 2008ல் நடந்த முதல் சீசனில் கேகேஆர் அணி 6ம் இடத்தை பிடித்தது. அடுத்த சீசனில் கேப்டன்சி பொறுப்பிலிருந்து கங்குலி விடுவிக்கப்பட்டு, பிரண்டன் மெக்கல்லம் கேப்டனாக்கப்பட்டார். கொல்கத்தா கங்குலியின் கோட்டை. கங்குலியை அணியில் எடுக்கவில்லை என்பதற்காக, கொல்கத்தாவில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில், ஒட்டுமொத்த ஈடன் கார்டன் ஸ்டேடியமும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆதரவளித்து உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அப்படியிருக்கையில், ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து கங்குலியை நீக்கினால் சும்மா இருப்பார்களா? ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். அந்த சீசனில் 8ம் இடத்தை பிடித்தது கேகேஆர். 

இதையடுத்து மீண்டும் 2010 ஐபிஎல்லில் கங்குலி கேப்டனாக்கப்பட்டார். கங்குலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு கேகேஆர் அணியின் அப்போதைய பயிற்சியாளர் ஜான் புக்கானன் தான் காரணம் என அப்போது கேகேஆர் அணியில் இருந்த ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, 2008ல் ஐபிஎல் தொடங்கியபோது கேகேஆர் அணியில் கங்குலி, பாண்டிங், மெக்கல்லம் ஆகியோர் இருந்தனர். கங்குலி கேப்டன்; ஜான் புக்கானன் பயிற்சியாளர். ஆரம்பத்தில் அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக இருவருக்கும் இடையே மோதல் உருவானது. கங்குலி - புக்கானன் ஆகிய இருவரது அணி மேலாண்மை ஸ்டைலும் வேறு வேறு. அதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கங்குலியை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு 2009 சீசனில் கேப்டன்சியிலிருந்து புக்கானன் நீக்கியதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

2010 ஐபிஎல்லில் கேகேஆர் அணியை மீண்டும் வழிநடத்திய கங்குலி, அதற்கடுத்த சீசனில் அணியிலிருந்தே புறக்கணிக்கப்பட்டார். 2011 மற்றும் 2012 ஐபிஎல் சீசன்களில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக ஆடி பின் ஓய்வுபெற்றார்.
 

click me!