ஐபிஎல்லை நடத்த அது செம ஐடியா..! மைக்கேல் வானை வழிமொழியும் ஆகாஷ் சோப்ரா.. ஆனால் வாய்ப்பில்ல ராஜா

By karthikeyan VFirst Published May 22, 2021, 3:08 PM IST
Highlights

ஐபிஎல்லை நடத்த மைக்கேல் வான் கொடுத்த ஆலோசனையை ஆகாஷ் சோப்ரா வழிமொழிந்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய 31 போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், இங்கிலாந்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. 

அதில் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 14ம் தேதி தான் முடிகிறது. அதன்பின்னர் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், ஐபிஎல்லை நடத்த ஏதுவாக கடைசி டெஸ்ட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், டெஸ்ட் தொடரை முழுமையாக முடித்துவிட்டு ஐபிஎல்லை ஆடுவதற்கான ஆலோசனை கூறினார் மைக்கேல் வான். இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டை முன்கூட்டியே தொடங்கினால், டெஸ்ட் தொடர் முன்கூட்டியே முடிந்துவிடும். அதன்பின்னர் ஐபிஎல்லை நடத்தலாம். இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதால் இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்தில் நடக்கும் தி ஹண்ட்ரட் தொடரில் ஆடமுடியாது. எனவே டெஸ்ட் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர்களை தி ஹண்ட்ரட் தொடரில் ஆட அனுமதித்தால், ஐபிஎல்லை நடத்த முடியும். இது நல்ல டீல் என்றார் மைக்கேல் வான்.

மைக்கேல் வான் கூறிய ஆலோசனை சரியானது தான் என்றும், அதை வழிமொழிவதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

ஆனால் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தும் ஐடியாவே இல்லை என்று பிசிசிஐ தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய வீரர்களை பிசிசிஐ வெளிநாட்டு தொடர்கள் எதிலும் ஆட அனுமதிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

click me!