அஃப்ரிடி பண்ண மாதிரி பண்ணுங்க தம்பி..! ரெய்னாவுக்காக உண்மையாகவே வருந்தும் ஒருவர் இவர் தான்

By karthikeyan VFirst Published Aug 21, 2020, 6:19 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னா ஓய்வு முடிவை திரும்பப்பெற்று மீண்டும் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவித்தார். 33 வயதே ஆன ரெய்னாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. 

2005ம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா, அதன்பின்னர் தோனியின் கேப்டன்சியில் அவரது ஆஸ்தான வீரராகவும் நெருங்கிய நண்பராகவும் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ஜொலித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரெய்னா சோபிக்காததால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார். 

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களையும் 78 டி20 போட்டிகளில் ஆடி 1605 ரன்களையும் விளாசியுள்ளார். வெறும் 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ரெய்னா நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவரான ஜாண்டி ரோட்ஸுக்கே மிகவும் பிடித்த ஃபீல்டர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவராஜ் சிங், கைஃப் ஆகியோர் செட் செய்திருந்த இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர் ரெய்னா. 2011 ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ரெய்னாவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கே சென்றது. 

ரெய்னா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவந்த நிலையில், 2015-2016 காலக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. 2018ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து தொடரில் ஆடிய ரெய்னா, அதில் சரியாக ஆடாததால் மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்திய அணியில் தனக்கான இடத்தை எதிர்நோக்கியே இருந்தார் ரெய்னா. லாக்டவுனில் கூட இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் தருணத்திற்காக காத்திருப்பதாக கூறியிருந்த நிலையில், திடீரென ஓய்வறிவித்தது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களுக்கே அதிர்ச்சியளித்தது.

ரெய்னா மீது தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் கரிசனம் காட்டியிருக்கலாம் என்று தெரிவித்திருந்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ரெய்னா ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, சுரேஷ் ரெய்னா இன்னும் நிறைய ஆடியிருக்கலாம். அவர் ஓய்வு பெற வேண்டிய அவசியமே இப்போது இல்லை. அவருக்கு வெறும் 33 வயதுதான். அவர் காயங்களால் அவதிப்பட்டார். ஆனால் எந்த வீரர் தான் காயமடையவில்லை? அறுவை சிகிச்சைக்கு பிறகு ரெய்னா, ஃபிட்டாகவும், வலுவாகவும் இருக்கிறார். அவர் மீண்டும் களம்காணும் துடிப்பில் இருந்தார்.

தோனி ஓய்வறிவித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனெனில், ஒருவேளை ஐபிஎல் வழக்கம்போல ஏப்ரல் - மே மாதத்தில் நடந்திருந்தால், டி20 உலக கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடந்திருக்கும். தோனி ஆடியிருப்பார். டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் கூட தோனி ஓய்வு அறிவித்திருக்கலாம். ஆனால் ரெய்னாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் ஷாஹித் அஃப்ரிடியை போல ஓய்வை திரும்பப்பெற்று மீண்டும் ஆட வேண்டும். அவருக்கு 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஐபிஎல் சீசன்கள் அருமையான வாய்ப்புகள். இவற்றை பயன்படுத்தி, இந்த தொடர்களில் சிறப்பாக ஆடினால் டி20 உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பு பெறலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!