பொதுவாக ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு ஒரு ஜாதகம் வைத்திருப்பார்கள். அதுவே பெண்களுக்கு இரண்டு ஜாதகம் எழுதுவார்கள். அவர்கள் பிறந்த நேரம் குறித்து எழுதும் ஜாதகம் ஒன்று. மற்றொன்று அவர்கள் வயதுக்கு வரும் நேரம் குறித்த ஜாதகம். கால மாற்றத்தில் பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஒரு பெண் குழந்தை ஜனன காலம் போன்றே அவர்கள் வயதுக்கு வரும் நேரமும் மிக முக்கியமான காலம் என்று சொல்லப்படுகிறது. ஒரு பெண் முழுமையடைய கூடிய தாய்மை காலத்தை உண்டாக்குவதன் அடிப்படையே ருதுவாகும் காலம். இதை அடிப்படையாக கொண்டு தான் ஜனன ஜாதகம் போன்று ருது ஜாதகமும் கணிக்கப்படும்.
பிறந்த ஜாதகம் போன்று ருது ஜாதகமும் முக்கியமானது. ருது ஜாதகத்தில் முக்கிய இடம் செவ்வாய் கிரகத்துக்குக்கு தான். ஏனெனில் உடலில் ஓடும் ரத்தத்துக்கு உரிய கிரகம் செவ்வாய் கிரகம் தான். பெண்ணின் பருவத்தை உணர்த்துவது உடலில் உள்ள இரத்தம் தான். அதனால் தான் இரத்தத்துக்கு உரிய செவ்வாய் அந்த ஜாதகத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது. பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்தை கொண்டு அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருப்பார். என்ன மாதிரியான குணங்களை கொண்டிருப்பார் என்பதை கண்டறியலாம்.
இந்த ருது ஜாதகத்தில் செவ்வாயின் இருப்பிடத்தை கொண்டு அவளுக்கு வரப்போகும் கணவனின் குணத்தையும், தன்மையையும் கூட அறிய முடியும். எனினும் இதில் பெண் ருதுவான நேரம் மிக முக்கியமானது. அதை சரியாக குறித்திருக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை விரதமும் கிடைக்கும் பலன்களும்!
பெண்ணின் பிறந்த ஜாதகம் கொண்டு அப்பெண் ருதுவாவதை அவர்கள் ஜாதகத்தில் கண்டறிய முடியும் என்கிறார்கள் ஜோதிட வித்தகர்கள்.
வராகமிகிரர் எழுதிய பிரு ஹத் ஜாதகம் என்னும் நூலில் லக்னத்துக்கு அபஜெய ஸ்தானத்தில் சந்திரன் 1,2,4,5,7,9,11 என்ற இடங்களில் சஞ்சரிக்கும் போதுசந்திரனையோ லக்னத்தையோ செவ்வாய் பார்த்தால் அந்த பெண் ருதுவாகிறாள் என்று தெளிவாக எழுதியுள்ளார்.இந்த விதியை ஒட்டிகணித்தால் ருது ஜாதகம் சரியாக அமையும்.அதுமட்டுமல்ல ருதுவான பெண் எந்த மாதத்தில் எந்த நாளில் என்ன நட்சத்திரத்தில் என்ன திதியில் என்பதை பொறுத்து அதற்கு தனித்தனி பலன்கள் சொல்வதும் உண்டு.
தடைப்பட்ட திருமணம் கைகூட திருமணக்கோல வெங்கடாஜலபதியை தரிசியுங்கள்!
ருதுவான நேரம் அறியாவிட்டாலும் அனுபவமிக்க ஜோதிடரை சந்திக்கும் போது அதை கண்டறிந்துவிட முடியும். பெண் காலை, மதியம், பொழுது போன அந்தி சாயும் வேளை என எப்போது வீட்டின் எந்த திசையில் இருக்கும் போது ருதுவானால் என்பதை சொன்னாலே கணித்துவிடுவார்கள்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவரது ஜனன ஜாதகம் தான் முக்கியம். பிறக்கும் போது உண்டாகும் கிரகநிலைகளை அடிப்படையாக கொண்டு தான் லாப நஷ்டங்கள் கணிக்க முடியும். அதோடு பிறக்கும் போது ஒரு லக்னம் இருக்கும். அவர்கள் பருவ வயதை அடையும் போது இன்னொரு லக்னம் இருக்கும்.
அதனால் திருமண பொருத்தம் பார்க்கும் போது குழப்பத்தை உண்டு செய்யும் என்றும் சிலர் சொல்கிறார்கள். மேலும் தோஷத்தை கணக்கிட்டு திருமண பொருத்தம் பார்க்க ஜனன கால ஜாதகம் தான் முக்கியம் என்று சொல்லி ருதுவான காலத்தை பலரும் குறித்து வைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.