திருப்பதி வெங்கடாசலபதி கோவில் 2023-24 பட்ஜெட் வருமானம் ரூ. 4411 கோடியாக கணிப்பு!!

By Dhanalakshmi GFirst Published Mar 23, 2023, 4:29 PM IST
Highlights

உலகிலேயே பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் 2023-24ஆம் ஆண்டுக்கான  வருமானம் 4,411 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 1933ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கமிட்டியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்ஜெட் கணிப்புகளில் அதிகமானது ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமர்பிப்பது வழக்கம். அப்படி சமர்பிக்கப்படும் பட்ஜெட்டை மாநில அரசு அங்கீகரிக்கும். கடந்த பிப்ரவரி மாதம் இந்த பட்ஜெட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி. சுப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த பிப்ரவரி மாதம் எம்எல்சி தேர்தல் நடந்த காரணத்தால், நன்னடத்தை விதிகளால் அதிகாரபூர்வமாக தேவஸ்தானம் பட்ஜெட்டை அறிவிக்க முடியாமல் போனது. கடந்த ஆண்டை விட பட்ஜெட்டில் வருமானம் 43% அதிகமாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு உண்டியல் வசூல் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டு வருமானம் ரூ. 3,096 கோடியாக இருந்தது. முதலீடுகள் மீதான வட்டி வருமானம் அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில் வட்டி வருமானம் மட்டுமே ரூ. 900 கோடியாக இருக்கும்.

கொரோனா காலங்களில் ஆன்லைன் சேவை வசதியை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த சேவை மூலம் கோவிலுக்கு ரூ. 100 கோடி கிடைத்து இருந்தது. இந்த ஆன்லைன் சேவையை நிறுத்தாமல் தொடருவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து இருக்கிறது'' என்றார்.

பிரசாதம் விற்பனை மூலம் கோவிலுக்கு ரூ. 500 கோடியும், தரிசனம் டிக்கெட் விற்பனை மூலம் 330 கோடியும், அர்ஜிதா சேவை டிக்கெட் விற்பனை மூலம் 140 கோடியும், தங்கும் விடுதி மற்றும் கல்யாண மண்டபம் மூலம் 129 கோடியும், மனித முடி காணிக்கை விற்பனை மூலம் 126 கோடி வருமானமும் கிடைக்கலாம் என்று தேவஸ்தானம் கணித்துள்ளது.

கோவிலின் செலவினமாக பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான சம்பளமாக ரூ. 1,532 கோடி, பொருட்கள் செலவாக ரூ. 690 கோடி, முதலீட்டிற்கு ரூ. 600 கோடி, பொறியியல் மூலதனச் செலவாக ரூ.  300 கோடி, மற்ற நிறுவனங்களுக்கு ரூ. 115 என குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு லட்டு வழங்குவதற்காக கூடுதல் கவுண்டர்களை அமைப்பதற்கும் ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் கூடுதல் கட்டிடப் பணிகளுக்கு என்று ரூ. 4.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

click me!