இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் கையில் கம்புடன் தான் போகவேண்டுமாம்!

By SG Balan  |  First Published Aug 15, 2023, 7:13 PM IST

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தற்காப்புக்காக ஒரு கம்பை எடுத்துச் செல்லவேண்டும் எனவும் அதைத் தாங்களே கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு்ச் செல்லும் பக்தர்கள் இனி, வன விலங்குகள் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு கம்பையும் எடுத்துச் செல்லவேண்டும். தேவஸ்தானமே பக்தர்கள் அனைவருக்கும் தடிகளைக் கொடுக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கோயிலுக்குச் செல்லும் வழியில் 6 வயது சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கோவிலுக்கு வரும் பாதசாரிகள் இனி ஒரு பாதுகாவலருடன் நூறு நூறு பேராகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Latest Videos

9 ஆண்டில் மத்திய அரசு ரூ.2.73 லட்சம் கோடி சேமித்திருக்கிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் கருணாகர் ரெட்டி கூறுகையில், “வனவிலங்குகள் தாக்கினால் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு வழங்கப்படும். எவ்வளவு தேவைப்பட்டாலும் அனைவருக்கும் வழங்குவோம்" எனக் கூறியுள்ளார். 

வனவிலங்குகளை கவரும் வகையில் பக்தர்கள் கோயிலுக்கு வரும் வழியில் உள்ள பாதைகளில் உணவுக் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தேவஸ்தான அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பாதசாரிகள் செல்லும் பகுதிக்கு வேலி அமைப்பதற்கான கோரிக்கை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த தேவஸ்தான் அதிகாரி தெரிவித்திருக்கிறார். இதனிடையே, கோவிலில் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், சில நடவடிக்கைகள் பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

"நாங்கள் தொலைதூரத்தில் இருந்து வருகிறோம். அவர்கள் மதியம் 2 மணிக்குப் பிறகு குழந்தைகளை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் இரவு முழுவதும், மறுநாள் காலை 5 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று ஆறு வயது குழந்தையுடன் வந்த ஸ்வாதி கிரண் என்பவர் புகார் கூறுகிறார்.

"யாத்ரீகர்களை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும் அல்லது பாதையில் வேலி அமைக்க வேண்டும்" என்று ஹைதராபாத்தை சேர்ந்த மற்றொரு பக்தரான பாலகிருஷ்ண கவுட் வலியுறுத்துகிறார்.

வீடுதோறும் பறக்கும் மூவர்ணக் கொடி! இணையத்தில் இதுவரை 88 மில்லியன் செல்ஃபிகள் பதிவு!

click me!