மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 10ம் ஆண்டு பால்குட தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் செய்து காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் இரவு அம்பாள் வீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்தபடித்துறையில் இருந்து சக்தி கரகம், அழகு காவடி பக்தர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கேரளா செண்டை மேளம் முழங்க வான வேடிக்கை, மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தன.
பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.