அபிஷேகத்தின் போது நண்டு வெளிபட்டு காட்சி தரும் அதிசய கோயில் பற்றி தெரியுமா?
கும்பகோணம் அருகே திருவியலூரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் திருத்தேவன்குடி அருள்மிகு கற்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நண்டாங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் அபிஷேகம் செய்யும் போது நண்டு வெளிப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆம்.. உண்மை தான்.. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..
இந்திரனின் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இந்த தலத்துக்கு வந்து சிவனை பூஜித்தானாம். தினமும் நள்ளிரவில் அந்த நண்டு தீர்த்த குளத்தில் பூத்த தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று அந்த மலரை இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்துள்ளது.
இந்திரனும் தினமும் அதிகாலை இந்த கோயிலுக்கு வந்து தாமரை மலர் சூட்டுவது வழக்கம். தனக்கு முன்னர் ஈசனுக்கு மலர் சூட்டப்பட்டிருப்பதை கண்டு இந்திரன் ஆச்சர்யம் அடைந்துள்ளான். மேலும் தனக்கு முன்னர் யார் ஈசனுக்கு தாமரை மலர் சாற்றியது என்றும் கண்காணித்து வந்துள்ளான். அப்போது நள்ளிரவில் ஒரு நண்டு தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலரை பறித்துக்கொண்டு ஈசனிடம் செல்வதை பார்த்து இந்திரன் கோபமடைந்தான்.
உடனே லிங்கத்தின் மீது ஏறி தாமரை மலரை சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்டி முயன்றுள்ளான். ஆனால் சிவபெருமான் நெற்றியில் வெட்டு விழுந்தது. நண்டு உருவில் இருந்த கந்தர்வனை காக்க நினைத்த ஈசன், லிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவிலிருந்த கந்தர்வனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
மேலும் இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தர்வனே நண்டு உருவில் வந்து தன்னை பூஜிப்பை சிவபெருமான் அசரீரியாக இந்திரனுக்கு தெரிவித்தார். இதை கேட்ட இந்திரன் தனது தவறுக்கு வருந்தினார். மேலும் நண்டின் சாபத்தை நீக்கி விமோசனம் தந்தார் ஈசன். இதன் காரணமாகவே இந்த கோயிலுக்கு திருத்தேவன் கொடி என்ற பெயர் வந்தது என்றும், இங்கு அருள்பாலிக்கும் சிவன் கற்கடேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் தல புராணம் கூறுகிறது.
Black Thread : நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு இது தான் காரணமா? இதில் இவ்வளவு நன்மைகளா?
சிவனை நண்டு வழிபடுவது போன்ற சிற்பம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. கற்கடேஸ்வரர் லிங்க திருமேனியில் வெட்டு தழும்புகளும் காணப்படுகின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும், பூசம் நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் பசுவின் பாலை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கிறது.
இந்த தலத்தின் இறைவி அருமருந்தம்மையாக காட்சி தருகிறார். இந்த அம்மனுக்கு சாத்தப்படும் எண்ணெய் சர்வ நோய்களுக்கும் நிவாரணமாக உள்ளது. இந்த தலத்தில் தான் சந்திரன் இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வேண்டுமெனில் இந்த தலத்தில் வழிபடலாம். பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் சந்திரன் சன்னதியில் அவர் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தருவார். ஆனால் இந்த கோயிலில் மட்டும் தான் சந்திரன் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி அளிப்பார்.