சுகப்பிரசவம் ஆகணுமா தாயுமானவனுக்கு வாழைத்தார் வழிபாடு செய்யுங்க!

By Dinesh TGFirst Published Sep 13, 2022, 12:56 PM IST
Highlights

வாழும் உயிர்க்கெல்லாம் இறைவன் தாயுமானவன், தந்தையுமானவன். திருச்சி மலைக்கோட்டையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தாயுமானவன். இப்பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்.
 

பூம்புகாரில் வணிகர் குலத்தில் பிறந்தவர் ரத்தினக் குப்தன். இவருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வரம் வேண்டி இறைவனை வழிபட்டு வந்தார். இறைவன் அருளால் ஓர் அழகிய புதல்வியைப் பெற்றார் இவர். அக்குழந்தைக்கு ரத்னாவதி எனப் பெயரிட்டார்.

ரத்னாவதி பெரியவளாகித் திருமணப் பருவத்தை அடைந்தவுடன் திருசிராமலையில் வாழ்ந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு மகளை மணம் செய்து வைத்தார். மகிழ்ச்சியுடன் கழிந்த திருமண வாழ்க்கையின் பலனாக தாயாகும் பேறு பெற்றாள் ரத்னாவதி.

திருசிராமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் செவ்வந்தி நாதரைத் தினந்தோறும் வழிபட்டு வந்தாள். பிரசவ காலம் நெருங்கியது. பூம்புகாரில் இருக்கும் தன் தாய்க்குத் தகவல் அனுப்பி உடனே வந்து தன்னை கவனித்துக் கொள்ளம்படி வேண்டினாள் ரத்னாவதி. தாயும் மகளுக்கு வேண்டிய மருந்துகள், எண்ணெய் போன்ற பொருட்களுடன் பூம்புகாரிலிருந்து திருசிராமலைக்குப் பயணமானாள்.

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அந்தத் தாயால் திருசிராமலைக்கு வர இயலவில்லை. மகள் ரத்னாவதியோ தன் தாயின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து ஏமாந்தாள். தன் கவலையைச் செவ்வந்தி நாதரிடமே
முறையிட்டாள்.

பக்தையின் முறையீட்டைக் கேட்ட இறைவனின் மனம் கரைந்தது. உடனே, ரத்னாவதியின் தாய்வேடம் பூண்ட செவ்வந்தி நாதர், ரத்னாவதியின் வீட்டை அடைந்தார். தாயைக்கண்ட மகள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினாள். தாயாக வந்த இறைவன் ரத்னாவதியுடன் தங்கினார்.

பிரசவத்துக்கான உரிய நேரம் வந்தது. தாய் வேடத்தில் இருந்த இறைவன் மகளுக்குமருத்துவம் பார்த்தார். மகள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
மகளோடு சில நாட்கள் தங்கிய இறைவன் தாயையும், சேயையும் பராமரித்து வந்தார். இடையில், காவிரியில் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்து தன் மகள் வீட்டிற்கு வந்தாள். அவளைக் கண்ட ரத்னாவதி திகைத்தாள். இதென்ன இரண்டு தாய்கள். இதில் உண்மையான தாய் யார்? அவள் குழப்பம் நீங்குவதற்குள் இறைவன் மறைந்தார். வானில் இறைவி மட்டுவார் குழலம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றிக்
காட்சியளித்தார்.

அன்று முதல் திரிசிராமலை செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற திருப்பெயரோடு அழைக்கப் பெற்றார். அதாவது, தாயும் ஆன இறைவனே தாயுமானவர். இறைவனை மனமுருக வேண்டி வழிபட்ட ரத்னாவதியும் தல அடியார்களுள் ஒருவராக இத்தலத்தில் விளங்குகிறாள்.

அவ்வையும் முருகனும் நமக்கு கற்றுத்தந்தது இதுதான்!

இந்தப் புராணக் கதையின் நம்பிக்கை படி குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபடுவது பக்தர்களின் வாடிக்கை. வாழையடி வாழையாகக் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையைக் கருவறையில் வைத்துப் பூஜித்து, பின்பு அதைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

குழந்தை வரம் வேண்டுவோர் கருவுற்ற தாய்மார்கள் சுகப்பிரசவம் நடக்க இங்கு வந்து பிரார்த்தித்தால் செவ்வனே நடக்கும்.

click me!