
நவகைலாயம் என்பது ஒன்பது சிவாலயங்களை குறிக்கிறது. தமிழ்நாட்டில் திருவெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதிக்கரையில் இந்த நவகைலாயம் அமைந்துள்ளது. இதில் நான்கு கோயில்கள் திருநெல்வேலியில் அமைந்துள்ளன. மீதமுள்ள ஐந்து தூத்துக்குடியில் உள்ளன. ஒன்பது கிரங்களும் நவகைலாயத்தில் உள்ளன. உங்களுக்கு அவற்றின் வரலாறு தெரியுமா? தெரிந்து கொண்டால் வியந்து போவீர்கள்.
நவகைலாயம் அமைவிடங்கள்
முதலாவது கோயில் பாபநாசத்தில் சூரியன் பகவானுடன் அமைந்துள்ளது. சேரன்மகாதேவியில் சந்திரன், கோடக நல்லூரில் செவ்வாய், குன்னத்தூரில் ராகு, முறப்ப நாட்டில் குரு, ஸ்ரீவைகுண்டத்தில் சனி, தென்திருப்பேரையில் புதன், ராஜாபதியில் கேது, சேர்ந்தபூமங்கலத்தில் சுக்கிரன் என ஒன்பது நவகைலாயங்கள் உள்ளன. இங்கு வழிபாடு செய்தால் தோஷங்கள் விலகி பல நன்மைகளை பெறலாம்.
வரலாறு
முன்னொரு காலத்தில் பொதிகை மலையில் அகத்திய முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு முதல் சீடரான உரோமச முனிவர் அனைத்து சேவைகளும் செய்து வந்தார். அவருக்கு சிவனை தரிசித்து அருள்பெற்று முக்தி பெறுவதே தலையாய விருப்பமாக இருந்தது. தவத்தில் உறுதியாக இருந்தார். சிவனை மனமுருகி வழிபட்டு வந்தார்.
அவரின் தவம் கண்டு மனம் குளிர்ந்த சிவபெருமான், அந்த முனிவரின் பெருமையை உலகம் அறிய அகத்தியர் வாயிலாக ஒரு திட்டமிட்டார். அகத்தியரே உரோமச முனிவருக்கு சில வழிகளை கூறினார். அதாவது தாமிரபரணி சங்கமிக்கும்இடத்தில் உரோமச முனிவர் மூழ்கி நீராடினால் அவர் விரும்பியது கிடைக்கும் என கூறினார். மேலும், உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையோரமாகவே செல்ல வேண்டும் என்பது விதி.
"ஒன்பது மலர்களை நதியில் உன்னுடன் அனுப்புகிறேன். அந்தப் பூக்கள் ஒவ்வொன்றும் எங்கு ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபாடு நடத்தவேண்டும். அப்படி நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்றும், அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீவிர் நீராடினால் உம் எண்ணங்கள் நிறைவேறும்"இவ்வாறு கூறி உரோமேசரை அனுப்பினாராம் அகத்தியர்.
அகத்தியர் சொன்னபடியே அந்த மலர்களை தொடர்ந்து சென்றார் உரோமச முனிவர். அத்துடன் மலர்கள் ஒதுங்கிய பகுதிகளில் தனது ஆஸ்தான குரு சொன்னபடியே சங்கு மூலம் நீராடி சிவனை நவகிரகங்களாக நினைந்து வழிபட்டார். இப்படி தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி தான் உரோமச முனிவர் முக்தி அடைந்தார் என்கிறது புராணம்.
இப்படி அகத்தியரால் தாமிரபரணி நதியில் விடப்பட்ட ஒன்பது மலர்களையும் உரோமச முனிவர் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த காரணத்தால் தான் நவகையாலம் உருவானது. அகத்தியர் தாமிரபரணி நதியில் விட்ட கடைசி மலர் அடைந்த இடமே பூதமங்கலம் என கூறப்படுகிறது. தற்போது தாமிரபரணி நதி கடலில் சென்றடையும் பகுதியாக பூமங்கலம் அறியப்படுகிறது.
நவகைலாய தரிசன பலன்கள்
தோஷங்களை தீர்க்கும் வல்லமை நவகைலாய ஆலயங்களுக்கு உள்ளது. சிலருக்கு ஜாதகத்தில் நாகதோஷம் இருக்கும். ஒரே நாளில் ஒன்பது கோயில்களையும் தரிசித்தால் அவர்களுக்கு பலன் கிடைக்கும்.
விம்சோத்தரி தசா வரிசை முறை என்பது கிரங்களின் வரிசையான கேதுவில் ஆரம்பித்து சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என்பதாக முடியும். நவ கைலாய ஆலயங்கள் சூரியனில் ஆரம்பித்து சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் முறையே வரிசையாக அமைந்திருக்கின்றன.
தசாபுக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் அகல வேண்டுமென்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசேர அமைய பெற்றுள்ள நவகைலாய கோயில்களில் பரிகாரம் செய்தால் போதும்.