Maha Shivratri 2023: சிவபெருமானுக்கு பூஜை செய்யும்போது எந்த மலர்களால் வழிபாடு நடத்தினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானின் ஆசியை பெற சிவன் கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் மகாசிவராத்திரி அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். அன்றைய தினம் சிவனை வழிபடவும், விரதமிருக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் மலர்களால் வழிபடும் முறையும் முக்கியமானது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் விருப்பமான பூக்கள் உண்டு. அந்த பூக்களால் வழிபடும்போது அவர்கள் மனம் குளிர்ந்து அருள்பாலிப்பார்கள் என்பது ஐதீகம். லட்சுமி தேவிக்கு தாமரை மலர் என்றால் விருப்பம். கண்ணனுக்கு துளசி உகந்ததாக கருதப்படுகிறது. விநாயகருக்கு அருகம்புல்லும் சொல்லப்பட்டாலும் சிவபெருமானுக்கு பல மலர்கள் உகந்ததாகக் கூறப்படுகிறது.
undefined
வில்வ இலை வழிபாடு
வில்வ இலையில்லாமல் சிவவழிபாடு முழுமை பெறாது. புராணங்களின்படி, லக்ஷ்மி தேவியின் வலது திருக்கரத்தில் இருந்துதான் வில்வமரம் உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. சிவ வழிபாட்டில் வில்வ இலைகளை வைத்து பூஜித்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்குமாம்.
தும்பை பூ வழிபாடு
சிவபெருமானை பிரார்த்தனை செய்ய தும்பை பூவை பயன்படுத்துவார்கள். இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நம்முடைய பாவங்கள் நீங்கும் எனவும் நம்பப்படுகிறது.
எருக்கம் பூ வழிபாடு
முன் ஜென்ம பாவங்களில் விடுபட நினைப்பவர்கள் சிவபெருமானை எருக்கை மலர் கொண்டு வழிபாடு செய்வார்கள். உடல், மனம் ஆகிய இரண்டாலும் செய்த பாவங்களும் இந்த பூவினால் சிவபெருமானை வழிபடும்போது மன்னிக்கப்படும் என்பது ஐதீகம்.
தாமரை பூ வழிபாடு
சிவனின் அருளால் செல்வத்தை பெற நினைப்பவர்கள் தாமரை பூ வைத்து வழிபாடு செய்யலாம். வெள்ளை, இளம்சிவப்பு, நீலம் போன்ற தாமரை மலர்கள் இருந்தாலும், சிவனுக்கு நீல தாமரை தான் ஏற்றது.
அரளி பூ வழிபாடு
நினைத்த காரியம் நிறைவேற சிவபெருமானுக்கு அரளி பூவை வைத்து வழிபடலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவால் வழிபாடு செய்யலாம். வெள்ளை அரளி மலரை வைத்து சிவனை வழிபட்டால் மனதுக்கு விருப்பமான மனைவி அமைவார்கள் என்பது நம்பிக்கை.
ஊமத்தம் மலர் வழிபாடு
மகாசிவராத்திரி தினத்தில் சிவலிங்கத்திற்கு ஊமத்தம் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் விஷ ஜந்துக்களின் ஆபத்து விலகும். கண் தொடர்பான நோய்கள் மறையும். சிவனருள் பெற இந்த மலர்களால் வழிபடலாம்.
ரோஜா
சிவபெருமானை மனமுருகி நினைத்து ரோஜா மலர்களை கொண்டு வழிபட்டால், பத்து ஆண்டு செய்த யாகத்திற்கு சமம் என புராணம் தெரிவிக்கிறது. வெறும் எட்டு ரோஜா மலர்களால் சிவபெருமானை வழிபடும் நபர்கள் கூட கைலாச பதவியை பெறுவார்கள் என கூறப்படுகிறது.
மகாசிவராத்திரி அன்று சிவவழிபாட்டுக்கு தனி பலன்களும், மகத்துவமும் கிடைக்கும். ஒவ்வொரு மாதத்திலும் சிவனுக்கு பிடித்த மலர்கள் சூடி வழிபாடு செய்வது நல்ல மாற்றங்களை கிடைக்கச் செய்யும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?
எந்த மாதம், எந்த மலர்?
சித்திரை மாதத்தில் சிவ வழிபாடு செய்பவர்கள், பலாசம் என்ற ஒருவகை மலரால் வழிபடலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும். மனதிற்கும் நிம்மதி பெறலாம். வைகாசியில் புன்னையும், ஆனியில் வெள்ளெருக்கும் வைத்து சிவனுக்கு அர்ச்சித்து வழிபட்டால் உங்களுக்கு இருக்கும் கெட்ட எதிர்ப்புகள் விலகும். ஆடியில் அரளி சார்த்தி, சிவனை வேண்டிக்கொண்டால் சிறப்பு. ஆவணியில் செண்பக மலர்களால் வழிபாடு செய்தால், கடன் தொல்லை நீங்கி வாழ்க்கை வளமாகும்.
புரட்டாசியில் கொன்றை மலர்களும், ஐப்பசியில் தும்பைப் பூக்களும் கொண்டு வழிபட்டால் தொழில் விருத்தி அடையும். உத்தியோகம் நல்ல முன்னேற்றம் காணும். கார்த்திகையில், கத்திரிப்பூவும் மார்கழியில் பட்டி எனும் பூவும் சிவவழிபாட்டுக்கு ஏற்றது. தையில் தாமரை மலர்கள்தான் பூஜைக்கு ஏற்றது. அதை வைத்து அலங்கரிப்பதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் சிவனிடம் இருந்து மிகுந்த பலன்களை பெற்று தரும்.
இதையும் படிங்க: மகாசிவராத்திரி அன்று தரிசிக்க வேண்டிய புகழ்பெற்ற சிவன் கோயில்கள் தெரியுமா? இங்கே போனால் கட்டாயம் பலன் உறுதி