Thai Amavasya 2023: நம்முடைய முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்க தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய தினங்கள் சிறந்தது. தை அமாவாசையில் எப்போது தர்ப்பணம் அளிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
வரும் ஜனவரி 21ஆம் தேதி தை அமாவாசை(Thai Amavasai) நாளாகும். தங்கள் வீட்டில் இறந்த முன்னோருக்கு இந்த தினத்தில் தர்ப்பணம் செய்வது நல்ல காரியமாக கருதப்படும். சூரியன், சந்திரன் ஒரே ராசியில் ஒன்றாக இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுக்க வரும் 12 அமாவாசைகளில் முன்னோரை நினைத்து தர்ப்பணம் கொடுப்பவர்களின் வீட்டில் அமைதி நிலைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தர்ப்பணம் ஏன் கொடுக்க வேண்டும்?
தங்களுடைய முன்னோர் இறந்த தேதி தெரியாத நபர்கள் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு நன்மை பயக்கும். தங்களுடைய முன்னோர் வாழும் காலத்தில் அவர்களை பராமரிக்காமல் துன்பத்தில் வாட விட்டவர்களுக்கு பாவம் சேர்வதாக நம்பப்படுகிறது. முன்னோரின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மிகப்பெரிய பாவம். அதற்கு பாவ பரிகாரமாக தை அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பது நல்லது. தை அமாவாசை அன்று காலையிலேயே ஆறு, கடல் ஆகிய நகரும் நீர் நிலைகளுக்கு போய் தலை மூழ்கி நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்
தை அமாவாசை நாளில் காலை 6.17 மணி முதல் நள்ளிரவு 2.22 மணி (ஜனவரி 22ஆம் தேதி) வரை தர்ப்பணம் அளிக்க ஏற்ற நேரம். தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால் வேதனையில் அல்லப்பட்ட முன்னோரின் ஆன்மா சாந்தியடையும் என நம்பப்படுகிறது. ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்கள் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் கிடையாது. மதிய நேரம் தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.
தானம் கட்டாயம்!
தை அமாவாசை அன்று கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் போன்ற பொருள்களை தானம் கொடுக்கலா. இதன் மூலம் முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதோடு பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டியதும் கட்டாயம். அவரவர் நிலைமைக்கு ஏற்ப தர்ப்பணம் செய்யலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது!
தர்ப்பணம் கொடுப்பவர்கள் தனது கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறை முன்னோரின் பெயர்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து முடித்து வீட்டிற்கு வந்ததும் சுத்தம் செய்த முன்னோரின் படத்தை வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று துளசிமாலை போட வேண்டும். படத்திற்கு குங்குமம், சந்தனம் பூச வேண்டும்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி படாமல் இருக்க கட்டாயம் கண்மை வைக்கணுமா? உண்மை பின்னணி என்ன?
வீட்டில் இருக்கும் முன்னோர் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களைப் படைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை பசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரைக்கும் வீட்டில் தெய்வ வழிபாடு பூஜைகளை ஒத்தி வைக்க வேண்டும். தர்ப்பணம் முடிந்த பிறகு தான் தினசரி வழிபாடுகளை செய்ய வேண்டும்.
மறந்தும் செய்ய கூடாதவை
அமாவாசை தினங்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. வெங்காயம் பூண்டு ஆகிய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கருப்பு எள்ளை தர்ப்பணம் செய்யும்போது கடனாக பெறக் கூடாது. நீரில் இருந்தபடியே கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதே மாதிரி கரையில் இருந்தபடியே நீரில் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தைக் கிழக்கு திசை பார்த்தபடியே கொடுக்க வேண்டும் என்பதுதான் ஐதீகம். அதில் எந்த சமரசங்களும் செய்யக்கூடாது.
இதையும் படிங்க: கவலைகள் நீக்கும் 'தை' மாத முக்கிய விரதங்கள் எப்போது இருக்க வேண்டும்? என்னென்ன பலன்கள் முழுவிவரங்கள்!