சூரசம்ஹாரத்தின் புராணத்தை என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குழந்தை செல்வம் உட்பட அனைத்து செல்வங்களை தர கூடியது சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதம் சஷ்டி விரதம் வந்தாலும், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி வளர்பிறையில் 6 நாட்கள் வரும் மகா கந்த சஷ்டி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதத்தையும் கடைபிடித்த நன்மைகளை பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இந்த ஆண்டின் மகா கந்த சஷ்டி விரதம் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய நிலையில் இந்த விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தின் புராணத்தை என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
undefined
சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து சிவபெருமானிடம் பல வரங்களை பெற்றான். குறிப்பாக தன்னை எவரும் வெல்லக்கூடாது ஆணுக்கும் பெண்ணுக்கு பிறந்த குழந்தையால் தனக்கு மரணம் நேரக்கூடாது ஆகியவை அடங்கும். இதனால் ஆணவம் கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினான் சூரபத்மன். இதை பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலை கேட்ட ஈசன், தனது 5 முகம் மற்று அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் தோன்றி தனது நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் மூலம் 6 குழந்தைகள் உருவாக்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அந்த குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த பார்வதி தேவி, தனது திருக்கரங்களால் ஒரு சேர தழுவி ஒரு குழந்தையாக்கினார். அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்ததால் அழகன் முருகன் என்றும், ஆறு முகத்துடன் இருந்ததால் ஆறுமுகம் என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயென் என்றும் அழைக்கப்பட்டார்.
சூரசம்ஹாரம் எப்படி நடந்தது?
முதலில் சூரபத்மனிடம் பேசிப்பார்ப்போம் என்று முருகன் வீரபாகுவை தூது அனுப்பினார். இதுதான் சூர சம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும். வீரபாகுவின் தூதை ஏற்காத சூரபத்மன் அவரை சிறைபிடிக்க முயன்றான். ஆனால் வீரபாகு சூரனை எதிர்த்து போர் நடத்தினார். 2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவையும், 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவையும் கொன்றார். பின்னர் முருகனை சந்தித்து நடந்ததை கூறினார் வீரபாகு.
இதையடுத்து 4-வது நாள் முருகனே களமிறங்கினார். முருகனுக்கு சூரபத்மனுக்கும் திருச்செந்தூரில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. சூரபத்மன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரங்களை பெற்றிருந்தான். மேலும் முருக பெருமான் முன் தோன்றி சரமாரியாக அம்புகளை தொடுத்தான். ஆனால் அவை யாவும் முருகனின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. பல மாயாஜாலங்கள் செய்த சூரன் பல உருவங்களாக மாறி போர் செய்தான்.
அப்போது முருகன் தேவர்களை விடுவித்துவிட்டால் உன்னை மன்னித்துவிடுகிறேன், நீ உயிர் வாழலாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் ஆணவம் அடங்காத சூரபத்மன் விடாது போர் செய்தான். முருகன் சூரபத்மனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தை காட்டினார். சூரன் போர் செய்த ஒவ்வொரு நாளும் தனது ஆயுதங்களை இழக்க தொடங்கினான்.
சிவபெருமானால் வழங்கப்பெற்ற இந்திரஞாலம் என்ற தேரை அழைத்த சூரபத்மன், முருகனின் படை சேனைகளை அழைத்து பிரபஞ்சத்தில் உச்சியில் வைக்கும்படி கட்டளையிட்டான். அவன் கூறியவாறே இந்திரஞாலம் தேரும் முருகனின் படையை தூக்கி பிரபஞ்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.
முருகன் தனது வேல் மூலம், அந்த தேரை தடுத்தி நிறுத்தி தன்வசப்படுத்டினார். இதனால் திகைத்துப்போன சூரன், சிவபெருமானால் தனக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான். ஆனால் முருகனின் வேல் சூலப்படையை மழுங்க செய்தது. இதனால் அதிர்ந்த சூரபத்மன் தனது அம்புப்படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்க செய்தது.
தேவர்களை விடுவித்தால் அது தனக்கு அவமானம் என்று கருதிய சூரபத்மன் கையில் எந்த ஆயுதங்களும் இன்றி தொடர்ந்து போராடினான். ஆனால் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது போர் தர்மத்திற்கு விரோதம் என்று முருகன் எண்ணினார்.
எனவே இந்திரனை மயிலாக மாறும் படி கூறிய முருகன், அதன் மீதேறி சூரனை தாக்க தொடங்கினார். தனது படைகளை இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒளிந்து பதுங்கினான். கடைசியாக முருகன் எய்திய வேலானாது, சூரபத்மன் சென்ற இடமெல்லாம் துரத்தி சென்றது. கடைசியில் நீரினுள் மாமரமாய் உருமாறி நின்ற சூரபத்மனை இரு கூறாக்கி சம்ஹாரம் செய்தது.
ஆணவம் அழிந்த சூரன் தன் தவறை உணர்ந்து தன்னை மன்னிக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டினான். அவன் மேல் இரக்கம் கொண்ட முருகன், பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
மயிலை வாகனமாகவும், சேவலை கொடியிலும் தன்னுடன் இணைத்து கொண்டார். வெற்றி வீர திருமகனாய் முருகப்பெருமான திருச்செந்தூர் திரும்பினார். சூரனுடன் போர் புரிந்த முருகப்பெருமான் அவனின் ஆணவத்தை அடக்கி ஆட்கொண்ட நாளே சஷ்டி நாளாகும்.
பகைவனை கொல்வது இல்லை சஷ்டி விரதம். பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இதன் சிறப்பு. இந்த நிகழ்வினை அனைவரும் அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டு கந்த சஷ்டி விஷா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதனை காண உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிவது வழக்கம். சூரசம்ஹாரத்தை தொடர்ந்த்பு 7-ம் நாள் குமரவிடங்க பெருமான் – தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும்.