சாப்பிடுவதற்கு முன் வாழை இலையைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன்? அதன் ஆன்மீக, அறிவியல் காரணத்தை இங்கு பார்ப்போம்.
சாப்பிடும் முன்பாக வாழை இலையைச் சுற்றி மூன்று முறை தண்ணீரைத் தெளிப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நடைமுறை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மற்றும் நன்மை பயக்கும் விஷயத்தையும் கொண்டுள்ளது. இந்த நடைமுறை சித்ராகுதி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தென் மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பழக்கம் உள்ளது.
சில நேரங்களில் மக்கள் உணவை சாப்பிடத் தொடங்குவதற்கு முன் இயற்கையின் காரணிகளை கட்டுப்படுத்தும் கடவுளுக்கு பிரசாதமாக உணவின் ஒரு பகுதியை ஒதுக்குகிறார்கள். இதன் மூலம் மக்கள் தெய்வங்களின் ஆசியை பெறுவார்கள் என்பது ஐதீகம். ஆனால் இது மட்டும் காரணமல்ல.
முனிவர்கள் சொன்ன காரணம்
இந்த மாதிரி வாழை இலையில் தண்ணீர் தெளிக்கும் சடங்குக்கு பின்னால் ஒரு தர்க்கரீதியான காரணம் கூட இருக்கிறது. இது பண்டைய காலங்களில் முனிவர்களால் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த முனிவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை வனப்பகுதிகளிலோ அல்லது மண் வீடுகளிலோ தான் கழித்தனர். அங்கு அவர்கள் கீழே அமர்ந்து தான் உணவு சாப்பிட்டனர். அவர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு தரையில் சிந்தும் வாய்ப்பு இருந்தது. இது ஆரோக்கியமற்றது; அதனால்தான் இலையை சுற்றிலும் அழுக்கு அல்லது தூசித் துகள்கள் படிய நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் வாழை இலையில் தூசி படாமல் தடுக்கப்படுகிறது.
இன்னொரு காரணம்...
பூச்சிகளை உணவில் அண்டவிடாமல் வைத்திருக்கவும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. வெளிச்சம் இல்லாத இரவில் எறும்புகளோ அல்லது பூச்சிகளோ இலையில் வந்து அமர்ந்தால் தெரியாது. அதனால் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதனால் பூச்சிகளும் எறும்புகளும் தண்ணீரைக் கடந்து வராது என நம்பப்படுகிறது. முனிவர்கள் சொன்ன இந்த காரணங்கள் இப்போது நடைமுறைக்கு சாத்தியமில்லை. கான்கிரீட் வீடுகளும், மின்சாரமும் இருப்பதால் முனிவர்கள் சொன்ன காரணங்கள் மக்களுக்கு பொருட்டாக இருக்காது.
ஆனால் வாழையிலையின் மீதிருக்கும் பச்சைத் தன்மை அளிக்கும் குளோரோபில் நம்முடைய உணவை செரிக்க உதவுவதோடு வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் என்கிறார்கள். வாழை இலை உணவு நம் பசியை மேலும் தூண்டுமாம். இதில் உண்பவர்கள் நோய்கள் இன்றி வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ? ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு பார்த்தால் வாழை இலையில் உண்பதே தனிசுவைதான்...அதை தவறவிடாதீர்கள்.
இதையும் படிங்க: வாஸ்துநாள்... இரவில் ஒரு கற்பூரம் ஏற்றி வாஸ்துபுருஷனை வழிபட்டால்.. துஷ்ட சக்திகள் விலகி ஓடும்..!