Latest Videos

தமிழ் மாதங்களில் வரும் 12 பௌர்ணமியின் சிறப்புகள் பற்றி தெரியுமா..?

By Kalai SelviFirst Published May 22, 2024, 2:47 PM IST
Highlights

இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. எனவே, மாத பௌர்ணமிகளின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. எனவே, மாத பௌர்ணமிகளின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

சித்திரை: தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இவ்வுலகில் மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்று நம்பிக்கை ஒன்று உள்ளது. அந்தவகையில், சித்திரை மாதம் வரும் பௌர்ணமி சித்ரகுபதனை வணங்கும் நாள் ஆகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். மதுரையில் இந்த பௌர்ணமி மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். 

வைகாசி: இந்நாளில் தான் அரக்கன் சூரனை அடக்க முருகன் அவதரித்ததாக புராணங்கள் சொல்லுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தினமானது தீமைகள் அழியும், நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினமாக கருதப்படுகிறது. திருச்செந்தூரில் இருக்கும் முருகன் கோவிலில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். 

ஆனி: ஆனி மாதம் வரும் பௌர்ணமி மூலம் நட்சத்திரத்தன்று வருவதால், அந்நாளில் மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும். அதுமட்டுமின்றி, இந்த ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.  

ஆடி: ஆடி மாதம் பௌர்ணமியானது காக்கும் கடவுள் கலிவரதனுக்கு உகந்த நாளாகும். அதுவும் குறிப்பாக, இந்த ஆடி பௌர்ணமி காஞ்சிபுரத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.  

ஆவணி: ஆவணி மாதம் வரும்  பௌர்ணமி அவிட்டம் நட்சத்திரத்தன்று வருகிறது. இந்நாளில் தான் பூணலை மாற்றிக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, சகோதர-சகோதரிகளை இணைக்கும் ராக்கி எனப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகை இந்த நாளில் கொண்டாடப்படுகிறது

புரட்டாசி: புரட்டாசி மாத பௌர்ணமி சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்குவதற்கானvமுக்கிய நாளாகும். மேலும், இந்த நாளில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தாலோ அல்லது அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றி வழிபட்டாலோ அதற்குரிய விசேஷ பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஐப்பசி: ஐப்பசி மாத பௌர்ணமி அன்று லட்சுமி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகமும் செய்வது மிகவும் சிறப்பாகக் கருதப்படடுகிறது. அதுமட்டுமின்றி இந்த பௌர்ணமியானது, கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இதையும் படிங்க:  திருவண்ணாமலையில் இன்று இரவு வைகாசி பௌர்ணமி கிரிவலம் ஆரம்பம்! முழு விவரம் உள்ளே

கார்த்திகை: கார்த்திகை மாத பௌர்ணமியானது, திருவிளக்கு தீபத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் தான் மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்தினர். அதுமட்டுமின்றி, திருவண்ணாமலையில் மலையே ஜோதிப்பிழம்பாக நின்று மக்களுக்கு அருளும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது. பொதுவாக, ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செய்வது சிறப்பானது தான். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாத பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பானதாகும்.

மார்கழி: மார்கழி பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது. இம்மாத பௌர்ணமி சிவனுக்கு உகந்தது. இந்நாளில் தான் இறைவன் நடராஜனாய் காட்சியளித்தார்.. சிதம்பரத்தில் மார்கழி மாத பவுர்ணமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

தை: தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தன்று வரும். மேலும், இந்த தை பௌர்ணமியானது, மதுரை மற்றும் பழனியில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இதையும் படிங்க:   Pournami Girivalam: திருவண்ணாமலை பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

மாசி: மாசி மாத பெளர்ணமி மகம் நட்சத்திர நாளன்று நிகழும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த பெளர்ணமியை கும்பகோணத்திலும், அலகாபாத்திலும் மிக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, எல்லா கோவில்களிலும் மாசி மகம் அனுசரிக்கப்படும். மேலும், புனிதத் தலங்களில் நீராடி சிவனை வழிப்பட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி: பங்குனி மாத பௌர்ணமியானது உத்திரம் நட்சத்திரத்தன்று வருகிறது. இந்நாளில் தான் சிவபெருமானுக்கும், அன்னை உமையாளுக்கும் திருமணம் நடந்ததாகக் புராணங்கள் சொல்லுகிறது. இந்த பங்குனி  பௌர்ணமி பழனியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!