கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா; முதல் முறையாக செங்கோலை பெற்ற பெண் அறங்காவலர்

By Velmurugan s  |  First Published Apr 20, 2024, 11:15 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பட்டாபிஷேக விழா இன்று கோலாகலமாக துவங்கியது. இந்நிலையில், முதல் முறையாக செங்கோலினை கோவில் அறங்காவலர் குழு தலைவரும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி ராஜன் பெற்றுக் கொண்டார்.


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா கோயிலில் உள்ள அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ராயர் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ராயர் கிரீடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு, திருமலைநாயக்கர் வழங்கிய செங்கோல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.

சிவ வாத்தியங்கள் முழங்க.. பக்தர்கள் கோஷம் விண்ணைப் பிளக்க அசைந்து வரும் தஞ்சை பெரிய தேர்..!

மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தை தொடர்ந்து அம்மனின் பிரதிநிதியாக இருந்து அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்ற  அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார். முன்னதாக கோவில் கணக்குப்பிள்ளையிடம் தங்க எழுதுகோல் வழங்கப்பட்டது. பட்டாபிஷேகம் நடைபெற்ற நாளான இன்று துவங்கி ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் மதுரையில் அன்னை மீனாட்சியின் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம்.

ஆன்லைன் டிரேடிங் தொழிலில் நஷ்டம்: கணவன், கர்ப்பிணி மனைவி தற்கொலை!

முதன்முறையாக மீனாட்சியம்மன் கோயில் பட்டாபிஷேகம் விழாவின் பெண் அறங்காவலர் ஒருவர் செங்கோல் பெற்றது குறிப்பிடத்தக்கது. விழாவின் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக்கு விஜயம் நாளையும், விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 21 ஆம்தேதியும், 22 ஆம் தேதி சித்திரை வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

click me!