குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரஸ் ஆலயத்தில் தரிசனம் செய்தால் மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பழங்காலத்தில் ‘பட்சி தடாகம்’ என்ற பெயர் இருந்துள்ளது.. ‘பட்சி’ என்றால் குருவி. ‘தடாகம்’ என்றால் குளம் என்று பொருள். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது. இந்த குருவிகுளம் ஜமீன் பகுதியை பெம்மசானி வம்சத்தினர் ஆண்டு வந்தனர்.
அப்போது குருவி குளத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஆலயம் நிர்மாணம் பணிகள் தொடங்கப்பட்டது. கோவில் கருவறையில் வைக்க வேண்டிய மூலவர் சிலைக்காக காசிக்குச் சென்று காசி விஸ்வநாதர் சிலையையும், காசி விசாலாட்சி சிலையையும் எடுத்து வரவேண்டும் என ஜமீன்தார் ஏற்பாடு செய்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் அன்றிரவு ஜமீன்தார் தூங்கிய போது அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, “நீ ஏன் காசிக்கு செல்லப் போகிறாய்? மதுரை மீனாட்சியான நானே அருகில் உள்ள கிணற்றில் இருக்கிறேன். அந்த சிலையைக் கொண்டு வந்து நீ கட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்” என கூறினாராம். .
கனவில் மீனாட்சி அம்மன் கூறிய இடம் நோக்கி ஜமீன்தார் புறப்பட்டு சென்றார். கழுகுமலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் செட்டிகுறிச்சி எனும் ஊரில் உள்ள கிணற்றின் மீது கருடன் வட்டமிட்டது. உடனே செட்டிகுறிச்சி ஊர்மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்த போது, அங்கு மீனாட்சி அம்மன் சிலை இருந்தது. உடனே அந்த சிலையை, ஜமீந்தார் மேளதாளம் முழங்க குருவிகுளம் கொண்டு வந்தார். மேலும் சிலையை குருவிகுளம் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்.
ஒருமுறை குருவிகுளம் குளத்தின் அருகில் மந்தை வெளியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களின் கண்ணில் மணலில் புதையுண்டு கிடந்த பல சிலைகள் தென்பட்டன. அவர்கள் உடனே ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்து காட்டினர். அவற்றைத் தோண்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மண்ணில் இருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சுந்தரேஸ்வர் ஆகியோரது சிலைகள் கிடைத்துள்ளன.
துளசி செடிக்கு அருகில் இந்த பொருட்களை வைக்காதீங்க.. வீட்டில் எதிர்மறை ஆற்றல், வறுமை அதிகரிக்குமாம்..
இதனால் குருவிகுளம் கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரரையும், பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்தனர். இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோயிலுக்க்கு செல்ல திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.