கந்தசஷ்டி விரதம் 2022 : விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாடு

Published : Oct 26, 2022, 04:28 PM IST
கந்தசஷ்டி விரதம் 2022 : விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாடு

சுருக்கம்

கந்தசஷ்டி விரதம்  அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் வேண்டும் வரங்கள் அனைத்தும் வாரி வழங்கக்கூடிய மகா கந்தசஷ்டி விரதம்  அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி விழா வழக்கமாக பிரதமையில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 25 ஆம் தேதி வரும் அமாவாசையில் தொடங்குகிறது.

ஆறுபடையப்பனின் ஆறுமுகங்களில் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அருளை தரும். அந்த ஒவ்வொரு அருளும்  நம்மைக் காக்கக் கூடியது என்று சொல்வார்கள். அதுபோன்று தான் கந்தசஷ்டி விரதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரக்கூடியது.எப்படி விரதத்தின் முதல் நாள் குழந்தை பேறு தரக் கூடியதோ, அதேபோன்று தான் இரண்டாம் நாள் விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரக் கூடியதாகும்.ன் நீங்கள் என்ன நினைத்து விரதம் இருந்தாலும் இந்த நாள் உங்கள் மாங்கல்ய பலனை  பலமாக்க முருகனை தியானியுங்கள். 

தினமும் விரதம் இருப்பவர்கள் கலசத்திற்கு பூ மாற்றி, காலை மற்றும் மாலை இருவேளையும் கண்டிப்பாக பூஜை செய்திட வேண்டும். அந்த வகையில் விரதத்தின் இரண்டாம் நாள் கலசத்திற்கு புதிய பூ சாற்றி,  கலசத்திற்கு முன் புதிதாக சட்கோண கோலமிட வேண்டும். மீண்டும் எப்போதும் போல நடுவில் ஓம் வரைந்து, சரவண பவ என்பதில் இரண்டாம் நாளில் இரண்டாவது எழுத்தான "ர" என்ற எழுத்தின் மீது நெய் விளக்கேற்ற வேண்டும்.

விரதத்தில் விளக்கேற்றும் போது தாமரை தண்டு அல்லது வாழைத் தண்டு திரியால் காலை, மாலை என இரு வேளையும் விளக்கேற்றுவது சிறந்தது. விளக்கு தானாக குளிர்வதால் எந்த பிரச்சனையும் இல்லை. மீண்டும் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை விளக்கின் முன் அமர்ந்து, காலை மற்றும் மாலையில் 108 முறை ஜபம் செய்ய வேண்டும். 

கந்த சஷ்டி விரதம் 2022: விரதத்தின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்? எப்படி விரதத்தை தொடங்குவது?

இரண்டாம் நாள் விரதம் என்பதால் இரண்டு சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, வயிறாற உணவிட்டு, பின்னர், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, வாழைப்பழம் வைத்து, அதோடு மங்கள பொருட்கள் வைத்து, தாம்பூலம் வழங்க வேண்டும்.  இன்று பிரசாதமாக முருகனுக்கு நைவேத்யமாக இரண்டாவது நாளில் பருப்பு பாயாசமும், தேங்காய் சாதமும் படைக்க வேண்டும்.

ஒருவேளை வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைக்க முடியாதவர்கள், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் சுமங்கலி பெண்களுக்கு முருகனுக்கு படைத்த நைவேத்யம், தாம்பூலமும் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெறலாம்.

கந்த சஷ்டி விரதத்தில்,ஏன் சுமங்கலி பெண்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்ற குழப்பமும் சந்தேகமும் ஏற்படலாம். தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காப்பது தான் முருகனின் அவதார நோக்கமே. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முருகனின் அவதார நோக்கம் தேவர்களின் தலைவன் இந்திரனின் மனைவி இந்திராணியின் மாங்கல்யத்தை காப்பது தான். அப்படி ஏற்படுத்தப்பட்டது தான் இந்த கந்த சஷ்டி விரதமும்.

அதனால்  தான் கந்த சஷ்டியின் இரண்டாம் நாளில் இந்த மாங்கல்ய வேண்டும் வழிபாடு. குறிப்பாக முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் கணவரின் ஆயுள் பலம் கூடுவதோடு,  தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கிறது என்பது ஐதீகம். இந்த கந்த சஷ்டி விரதத்தை சரிவர கடைப்பிடித்து வந்தால் நமது வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கும் துன்பங்களையம், வரவிருக்கும் துன்பங்களையும்  முருகப் பெருமான் விலக்கிடுவார். நீங்கள் என்ன வரம் வேண்டி இருந்தாலும் இந்த இரண்டாவது நாளில்  மாங்கல்ய பலம் வேண்டி முருகனை வணங்கினால் எண்ணியதை தந்திடுவான் எம்பெருமான் முருகன்.

PREV
click me!

Recommended Stories

Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!