தீபாவளி அன்று பல பூஜைகளும், விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக கேதார கெளரி விரதம், அமாவாசை, லட்சுமி குபேர பூஜையும் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கு கொண்டாடுவதற்கு பல பண்டிகைகள் இருந்தாலும், தீபாவளி எப்போதும் பலராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பதால் தீபாவளி என்றாலே தனிச்சிறப்பு தான். உலகின் இருளை போக்கி, ஒளியை ஏற்படுத்தும் பண்டிகையாக இருக்கிறது தீபாவளி பண்டிகை. இந்த ஆண்டு தீபாவளி அன்று பல பூஜைகளும், விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக கேதார கெளரி விரதம், அமாவாசை, லட்சுமி குபேர பூஜையும் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது. ஆனால் எதை எப்போது செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும்.
தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்வது விஷேசமானது. சமீப ஆண்டுகளாக தான் லட்சுமி குபேர பூஜை மிக பிரபலமாகி வருகிறது. அதிலும் தீபாவளி பண்டிகை அன்று இந்த பூஜை செய்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
லட்சுமி குபேர பூஜை வரலாறு..
செல்வத்திற்கு அதிபதியான குபேரன் ஒருமுறை தனது செல்வம் அனைத்தையும் இழந்து விட்டான். அப்போது குபேரர் தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்று இழந்த செல்வத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு சிவ பெருமான், மகாலட்சுமி தான் செல்வத்திற்கு உரியவர். அவருடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே உன்னால் செல்வத்திற்கு அதிபதியாக முடியும் என்று கூறினார். அதோடு மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற ஐப்பசி மாதம் அமாவாசை திதியில், மாலை நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.
சிவபெருமான் குபேரனுக்கு கூறிய அறிவுரையின் பேரில் இதை அப்படியே செய்து குபேரன் லட்சுமியை வணங்கி செல்வங்களையும் பெற்று விட்டான். இந்த நாள் தான் தீபாவளித் திருநாளாக கொண்டாடப்படுகிறது என்றும், இந்த நாளில் நாமும் செல்வத்தின் அட்சய பாத்திரமாக விளங்கும் குபேரரையும், அந்த செல்வத்தை குபேரருக்கு அளித்த மகாலட்சுமியையும் வணங்கி லட்சுமி குபேர பூஜையை செய்தால், வீட்டில் செல்வம் பெருகும், கடன்கள் தீரும் என்பதே ஐதீகம்.
தீபாவளி 2022 : நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும் தெரியுமா?
பூஜை செய்யும் முறை..
முதலில் குபேரர் அல்லது மகாலட்சுமி அல்லது இருவர் இணைந்து இருக்கும் படத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். லட்சுமி குபேரரின் படத்தை எடுத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து பூஜைக்கான இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த பூஜையை கலசம் கொண்டு செய்பவர்களும் உண்டு. அப்படி கலசத்தை பயன்படுத்தினால் கலசத்தில் தண்ணீர் ஊற்றுவதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை போன்றவற்றை கலந்து, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதனை சுற்றி மாவிலை வைத்து, வாழை இலையில் அல்லது தாம்பாலத்தில் அரிசி பரப்பி அதன் மீது இந்த கலசத்தை வைக்க வேண்டும். பின் லட்சுமி குபேர ஸ்தோத்திரங்கள், மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசுக்தம் ஆகியவற்றை பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
பின்னர் நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். நைவேத்தியம் பால் பாயாசம் அல்லது கற்கண்டு சாதமும், முடியாதவர்கள் எளிமையாக அவலில் சர்க்கரை, தேங்காய் துருவல் கலந்தும் படைக்கலாம். குபேரருக்கு நாணயங்களைக் கொண்டும், மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்!!
எப்போது பூஜை செய்ய வேண்டும்..
இந்தாண்டு தீபாவளியன்று மாலை நேரத்தில் தான் அமாாவசை திதி துவங்குகிறது. இதனால் குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி ஆகும். இந்த நேரத்தில் மேற்சொன்னபடி லட்சுமி குபேர பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து விடும். பூஜை செய்யும் போது,
"ஓம் குபேராய நம:
ஓம் தனபதியே நம:"
என்கிற மந்திரத்தை கூறி பூஜை செய்யலாம்.