பல பிரச்னைகளுக்கு தீர்வு தரக்கூடிய மகத்தான சக்தி வாய்ந்தது மௌனம். நாம் அனைவரும் கடைபிடிக்கும் உண்ணாவிரதத்தை காட்டிலும் மௌனமாக இருப்பது சற்று சிரமம் தான். ஆனால் எப்படி உண்ணாவிரதம் நம் உடல்நலத்திற்கு முக்கியமோ அதேபோன்று தான், மௌன விரதம் நம் மனநலத்திற்கு மிக முக்கியம்.
அமைதி தான் எப்போதுமே இன்பத்தை கொடுக்கும் என்று ஞானிகளும், ரிஷிகளும், யோகிகளும், மகான்களும் அவர்கள் சொல்ல நினைப்பதை மௌனத்தினால் உணர்த்தி விடுவார்கள். உதாரணத்திற்கு ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்கும் போது, சிலர் அமைதியாக இருந்தால் 'மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி' என்று கூறுவது போல் தான் இதுவும். அதேபோன்று தான் பரம்பொருளை பார்த்தவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே வராது. சில சமயங்களில் கோவில்களில் இறைவனை தரிசிக்கும் போது, உண்மையான அன்பின் காரணமாய் ஏதும் கேட்க தோன்றாமல், அமைதியாய் தரிசித்து திரும்பி இருப்போம். ஆனால் மனதில் எத்தனை துன்பங்கள் இருந்தும், திரும்பி வரும்போது துன்பங்கள் இன்றி நிம்மதியுடன் வந்து விடுவோம்.
ராமாயணத்தில் கூட மௌனத்தின் மகிமை குறித்து சீதா தேவி உணர்த்திய சம்பவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தாண்டகாரண்யத்தில் ராமர்,சீதா மற்றும் லட்சுமணன் தங்கியிருந்தனர். அப்போது ஏற்கனவே இருந்த ஆசிரமத்தில் இருந்து இன்னொரு ஆசிரமத்திற்கு செல்ல கிளம்பும் போது, ராமருடன் இணைந்து அவரின் வயதை ஒத்த இளைஞர்களும் உடன் சென்றனர். மேலும் ராமர் மீதுகொண்ட பக்தியின் காரணமாய் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வாழ்ந்த ரிஷி குமாரார்கள், மரவுரிதரித்து பார்ப்பதற்கு ராமர் மற்றும் லட்சுமணன் போன்று தோற்றம் கொண்டவர்களாக விளங்கினார்கள்.
அப்படி ஒரு முறை தான் தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்து வேறொரு ஆசிரமத்திற்கு செல்ல, அவர்கள் காட்டுவழியே அடைந்து அந்த ஆசிரமத்தை கடக்க வேண்டியிருந்தது. அப்படி செல்லும் போது, காட்டில் வசித்து வந்த பெண்களுக்கு ராமருடன் சீதா தேவியும் வருவது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சீதா தேவியை காண ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது சீதையை மட்டுமே அவர்களால் அடையாளம் காண முடிந்தது, ராமரை அடையாளம் காண முடியவில்லை. காரணம் அனைவரும் பார்ப்பதற்கு ராமரை போல் இருந்ததால் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் அங்கிருந்த அனைவரும் சீதையை சூழ்ந்து கொண்டனர்.
தேய்பிறை அஷ்டமி : அஷ்ட பைரவர் வழிபாடு செய்யுங்கள்! கஷ்டங்கள் நீங்கும்!
அப்போது ஒரு இளைஞரை மட்டும் தனியாக நிற்க வைத்து, 'இவர் தானே உங்கள் ராமர்' என்று கேட்க.. சீதையும் இல்லை என்று பதில் கூறினார். இப்படியாக ஒவ்வொரு இளைஞரையும் நிற்க வைத்து இவர் தானா? இவர் தானா? என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள். அந்த வரிசையில் லட்சுமணனையும் நிறுத்தி கேட்டார்கள். சீதையும் இல்லை என்று கூறிவிட்டார். இறுதியாக ராமரை நிறுத்தி இவரா? என்று கேட்க அதுவரையில் இல்லை.. இல்லை.. என்று பதில் கூறிக் கொண்டிருந்த சீதை எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தாள். உடனே மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று அங்கிருந்த பெண்களும் மனம் மகிழ்ந்து ராமரிடம் ஆசி பெற்றார்கள்.
குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?
இங்கு அனைவரும் சீதையை போன்று தான்.. இறைவனிடம் என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் தயக்கமின்றி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவரை தரிசித்தால் ஏதும் பேசாமல் மௌனத்தை கடைபிடிப்பார்கள். மௌனம் தான் பூரண ஞானத்தை கொடுத்து, வாழ்வை முழுமையாக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறையோ மௌனவிரதம் மேற்கொள்ளலாம். அதேபோன்று சந்திரன் ஆதிக்கம் பெற்ற நாட்களில் மௌனவிரதம் இருப்பது நல்லது. மௌனவிரதம் இருப்பது நம் உடல் மற்றும் உள்ளத்தை தூய்மையாக்கும். மௌனவிரதம் இருந்தால் அதிகம் கோபப்படுபவர்கள் கோபத்திலிருந்து விடுபடலாம். நாம் பேசம் காலங்களில் கூட மௌன விரதம் இருந்தால் தேவையற்ற வார்த்தைகள் வராது. பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். மௌனமும் ஒரு வகையில் தியானம் தான். நாம் நம்மை உணர, நம்மில் இருக்கும் இறைவனை உணர மௌனவிரதம் சிறந்த துணை புரியும்.