ஆலயத்துக்கு அருகில் சென்றாலே மணியோசையின் சத்தம் காதுக்குள் ரீங்காரமாய் ஒலிக்கும். இனிமையான இந்த ஓசையின் பின்னே அறிவியலும் உண்டு ஆன்மிகமும் உண்டு.ஏன் ஆலயத்தில் மணி ஒலிக்கிறது என்பதன் விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.
நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒரு அறிவியல் மறைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதற்கு மிக சிறந்த உதாரணம் தான் நாம் கோவிலில் அடிக்கும் மணி. கோவில் மணிக்கு பின் என்ன அறிவியல் ஒளிந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி சாதாரண உலோகத்தினால் செய்யப்படுவது அல்ல. தகர வகை உலோகமான கேட்மியம், ஜின்க், ஈயம், தாமிரம், நிக்கல், க்ரோமியும், மற்றும் மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால் செய்யப்படுகிறது. கோவில் மணியை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியில் அறிவியல் அடங்கியுள்ளது.
கோயில்களில் ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும் போதும், ஒவ்வொரு உலோகத்தில் இருந்து தனித்துவமான ஒலிகளானது ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும் கலக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமை உண்டாக்குமாம். அதனால் மணி ஒலிக்க தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும். இந்த மணியினால் எழக்கூடிய சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்கும். இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது.
மணியின் ஓசையில் இருந்து வரும் எதிரொலி, நமது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் தொடும். அதனால், மூளையின் வாங்கும் தன்மையும், உணர்வு திறனும் தீவிரமடையும். அதனால் தான் கருவறைக்கு செல்லும் முன் மணியை அடித்துவிட்டு செல்கிறோம்.
அதோடு மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும். ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்துவகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.
பொதுவாக கோயில் வாசலில் கட்டியிருக்கும் மணியை கோயிலுக்குள் நுழையும்போது ஒலிக்கவிடுவதன் காரணம், நமது ஆழ்மனதை விழிக்க செய்வதற்காகவே செய்யப்படுகிறது. உடலால் தூங்குபவர்களை ஓசையின்மூலம் எழுப்புவதுபோல், மனதையும் எழுப்பவே இந்த முறையை பின்பற்றுகிறோம். இந்த ஒலியால் மனமும் உடலும் விழிப்படையும் நேரம் கோயிலில் இருந்து வரும் நறுமணமும் விளக்கின் ஒளியும் நம்மை மேலும் ஊக்குவிக்கின்றன.
முன்னோர்கள் எல்லாவற்றையும் அர்த்தத்துடனும் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே செய்தனர் என்பது இன்று அறிவியல் பூர்வமாக விளக்கப்படும்போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இனி நீங்கள் ஆலயத்துக்குள் நுழையும் போதெல்லாம் ஆலயமணியின் ஓசையை அனுபவியுங்கள். ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த இசையை உணருங்கள். உங்கள் உடலினுள் உள்ளே உண்டாகும் அற்புதமான மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.
அவ்வையும் முருகனும் நமக்கு கற்றுத்தந்தது இதுதான்!
ஆலயமணி மட்டும் அல்ல உங்கள் வீட்டிலும் பூஜை வழிபாட்டின் போது மணியை ஆட்டும் போது அந்த நாதம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்றும். வீட்டுக்குள் நல்ல அதிர்வுகள் உண்டாகும்.