பூஜைகள் மற்றும் விரதங்களை தாண்டி சரியான மந்திரங்களையும் நாம் தெரிந்து கொண்டு உச்சரிப்பதால் நமக்கு நற்பலன்கள் கிடைத்திடும். நம் வாழ்க்கையில் இருக்கும் இருளும் நீங்கி ஒளிபிறக்கும்.
தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கு கொண்டாடுவதற்கு பல பண்டிகைகள் இருந்தாலும், தீபாவளி எப்போதும் பலராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பதால் தீபாவளி என்றாலே தனிச்சிறப்பு தான். உலகத்தின் இருளை நீக்கி, ஒளியை ஏற்படுத்தும் பண்டிகையாய் உள்ளது தீபாவளி பண்டிகை. இந்த ஆண்டு தீபாவளி அன்று பல பூஜைகளும், விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் பூஜைகள் மற்றும் விரதங்களை தாண்டி சரியான மந்திரங்களையும் நாம் தெரிந்து கொண்டு உச்சரிப்பதால் நமக்கு நற்பலன்கள் கிடைத்திடும். நம் வாழ்க்கையில் இருக்கும் இருளும் நீங்கி ஒளிபிறக்கும்.
தீபாவளி திருநாளான்று ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் இருப்பதாய் ஐதீகம். அந்த பணிகளை செய்யும் போது அந்தந்த தெய்வங்களுக்கான மந்திரங்களை உச்சரிப்பதால் நலன் பெற முடியும். தீபாவளி அன்று எல்லா நீர்நிலைகளிலும் கங்கை அம்மனும், விளக்குகளாக காமாட்சி அம்மனும், அந்த விளக்குகளில் ஏற்படும் ஒளியாக மகாலட்சுமியும் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் தீபாவளி திருநாளில் நாம் அனைவரும் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, விளக்கேற்றி இறைவனை வணங்கும் போது அவர்களுக்கான மந்திரத்துடன் வழிபடும் போது நம் வாழ்வு பிரகாசிக்கும்.
எப்போதும் தீபாவளியன்று அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பாகவே எழுந்து, உடல் முழுதும் நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையை தேய்த்து சுடுநீரில் குளிப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி நீராடுவதற்கு முன்பாக, நீங்கள் குளிக்க எடுத்து வைத்திருக்கும் நீரை சிறிதளவு கையில் எடுத்து,
"ஓம் நம சிவாயை நாராயண்யை தச தோஷ
ஹராயை கங்காயை ஷ்வாஹா"
என்கிற மந்திரத்தை துதித்து விட்டு நீராடினால் நல்லது. இந்த மந்திரத்தை நாம் துதிப்பதன் மூலமாக கங்கை அம்மனை வணங்குகிறோம். அதாவது சிவ பெருமானின் சடையில் வசிப்பவன் கங்கை. அதனால் சிவனின் திருச்சடையில் இருப்பவளே, நாரணன் பாதத்தை நீராட்டி மகிழ்பவளே, எல்லா விதமான பாவங்களையும் போக்குபவளே உம்மை வணங்குகிறேன் என்பதே இம்மந்திரம்.
தீபாவளி 2022 : நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும் தெரியுமா?
நாம் நீராடி முடித்ததும் புத்தாடைகள் அணிந்து, இறைவனை வணங்க விளக்கேற்றுவோம். அப்படி விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக விளக்காகவே இருக்கும் காமாட்சி அம்மனை வணங்குவது அவசியம்.
"ஸ்ரீசக்ர மத்யே வசந்தீம்-பூத
ராட்சச பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்
ஸ்ரீகாமக்கோட்யாம் ஜ்வலந்தீம்-காம
ஹுனஸ்ஸூ காம்யாம் பஜே தேஹி வாசம்"
இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இதற்கு ஸ்ரீ சக்கரத்தின் நடுவினில் வசிப்பவளே, பூதம், பிசாசு, ராட்சசர்கள் போன்ற துஷ்ட சக்திகளை அழித்து காப்பவளே, காமக்கோடியில் பிராகாசித்து இருப்பவளே, ஆசையற்றவர்களால் எளிதாய் அடைய கூடியவளே, பக்தர்களின் தேவை அறிந்து அதனை ஈடேற்ற கூடியவளே, எங்கள் காமாட்சி அன்னையே உம்மை வணங்கி வழிபடுகிறோம். எல்லா விதமான நன்மைகளையும் தந்தருள் வாயாக என்பதே அர்த்தம்.
தீபாவளி 2022 : தீபாவளியன்று எண்ணெய் குளியல் ஏன்? எப்போது செய்ய வேண்டும்..
இதையடுத்து விளக்கேற்றி அதில் இருந்து வரும் ஒளியை வணங்கிட வேண்டும்.
"ஓம் ஸ்ரீயே ஸ்ரீகரி தனகரி தான்யகரி
ஏஹ்யா அச்ய பகவதி வஸூதாரே ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாய் செல்வ மகளே, அணைத்து விதமான செல்வங்களின் வடிவாய் இருந்து தனமும், தானியமும் போன்ற எல்லாம் கிடைத்திட அருள்பவளே, ஒப்பில்லாதவளே தந்து பக்தர்கள் மீது கருணையை மழைபோல் பொழிந்து வருபவளே உன்னை வணங்குகிறேன் என்பதே.
தீப ஒளித்திருநாளில் உங்கள் வழிபாட்டையும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். வாழ்க்கையிலும் தீப ஒளி பிரகாசிக்கும்.