சித்ரா பௌர்ணமி 2024 எப்போது அதன் முக்கியத்துவம் என்ன ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு இருந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்தது. இது சித்ரா பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று கோயில்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். சித்ரா பௌர்ணமி 2024 எப்போது அதன் முக்கியத்துவம் என்ன ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சித்ரா பௌர்ணமி 2024 : எப்போது?
சித்ரா பௌர்ணமி வரும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 23 இரவு 7.48 மணிக்கு பௌர்ணமி திதி முடிவடைகிறது. பொதுவாக ஒரு நாள் தொடங்கும் போது என்ன திதியில் தொடங்குகிறதோ அந்த திதியே நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே பௌர்ணமி திதி 22-ம் தேதி மாலையே தொடங்கினாலும் ஏப்ரல் 23-ம் தேதியே சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்த உலகின் பாவ புண்ணிய பலனை அறிய, சிவபெருமான் பார்வதி மூலம் தங்கப் பலகை கொண்டு வர சொல்லி அதில் சித்திரம் அமைத்தார். அதை பார்த்து வியந்த பார்வதி, இந்த சித்திரத்தை பேச வைக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து, அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து, அதற்கு சித்திர புத்திரன் என்று பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் சித்தா பௌர்ணமி நாளில் அவதரித்தார். அண்ட சராசரங்களில் உள்ள அனைவரின் பாவ, புண்ணிய கணக்குகளையும் தினமும் தனக்கு தெரிவிக்கும் படி உத்தரவு பிறப்பித்திருந்தார் சிவபெருமான். அதன்படி சித்திர புத்திரனார் எமலோகத்தில் இருந்து இருந்து கணக்குகளை எழுதி வருகிறார். எனவே இந்த நாளில் விரதமிருந்து அவரை வணங்கினால் அவர் மனிதர்களின் பாவக்கணக்குகளை குறைத்து நற்பலன்களை வழங்குவார் என்பது நம்பிக்கை.
சித்ரா பௌர்ணமி வழிபாடு
இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்தரை வணங்குவதன் மூலம் நம் எண்ணத்தில் பாவம் செய்யும் எண்ணம் நீங்கி புண்ணியம் செய்யும் குணம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவதுடன், முருகனையும் அம்பாளையும் வழிபடுவதும் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி நாளில் வீட்டில் வழிபடுவதுடன், கோயிலுக்கு சென்று வழிபடுவதும் மிகவும் முக்கியம்.
இந்த நாளில் கோயில்களில் தெய்வங்களின் சக்தி அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் கோயிலுக்கு செல்வதால் அங்குள்ள நேர்மறை அதிர்வலைக நம் மீது படுவதால், அது நம் வாழ்விலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நமக்கு நல் வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. அப்புறம் போடுங்க! உங்க நல்லதுக்கு தான்!
ஒரு வேளை கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பௌர்ணமி பூஜை செய்து வழிபடலாம். வீட்டை முந்தைய நாளே சுத்தம் செய்து, பௌர்ணமி அன்று அதிகாலையில் வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து விளக்கேற்றி, சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.
மேலும் சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் திங்கள் மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 23 இரவு 8 மணி வரை கிரிவலம் செல்லலாம்.