திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை; காவடி எடுத்து வணங்கினால் நோய், சத்ரு பயம் நீங்கும்!!

By Asianet Tamil  |  First Published Jul 26, 2024, 1:14 PM IST

ஆடி கிருத்திகை தினமானது சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. இக்காலம் பகல் வெளிச்சம் குறைந்து இரவின் இருள் நீடித்திருக்கும் பருவத்தின் தொடக்க காலமாகும். எனவே மக்கள் தங்களின் வாழ்வில் துன்பம் எனும் இருள் அதிக காலம் நீடிக்காமல் இருக்க முருக பெருமானை வேண்டுவதால் அவர்கள் வாழ்வு ஒளிமயமாக இருக்க அருள் புரிவார் முருகன்.


கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த  நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் சிறப்பானது. தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் கார்த்திகையும், உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை கிருத்திகையும் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாப்படுகிறது. இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை பண்டிகை வரும் 29ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

வேண்டிய வரம் கிடைக்கும்:
ஆடிக்கிருத்திகை நாளில்  நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமானில் அறுபடை வீடுகளிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

ஆடிக்கிருத்திகை விரதம்:
மழைக்காலத் தொடக்கமான தட்சணாயணம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாக உள்ளது எனவேதான்  ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

ஆடி மாசம் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன் தெரியுமா? அறிவியல் உண்மை இதோ..

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை:
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா  வரும் 27ம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கி, 28ல் ஆடிபரணியை தொடர்ந்து 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு சரவண பொய்கை திருக்குளத்தில் முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். தொடர்ந்து 3 நாட்கள் தெப்பத்திருவிழாவில் உற்சவர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

ஆடி அஸ்வினி:
ஆடி அசுவினி நாளான 27ஆம் தேதியன்று மஞ்சள், செவ்வாடை அணிந்த பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்கள். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் காவடி சுமந்து வந்து முருகனை வழிபடுவார்கள்.

ஆடி பரணி
ஞாயிற்றுக்கிழமை ஆடி பரணி நாளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார் முருகப்பெருமான்.

Latest Videos

Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை; வீடு தேடி வரும் முன்னோர்கள்; எள்ளும் தண்ணீரும் கொடுத்தால் தோஷங்கள் நீங்குமா?

ஆடிக்கிருத்திகை தெப்ப உற்சவம்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு 29ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும்.  காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று  சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

நோய்கள் தீரும் விரதம்
முருகனுக்குரிய ஆடி கிருத்திகை நாளில் சுப்பிரமண்யரை வணங்கினால் உடல் உறுதி பெரும், நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம், மனோவலிமை பெறும், செல்வ செழிப்பு உண்டாகும், பூமி லாபம் பெறலாம், வீடு மனை தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், சத்ரு பயம் விலகும், இன்னும் பல எண்ணிலடங்கா நன்மைகளை பெற்று ஆடி கிருத்திகையில் சுப்ரமண்யரின் அருள் பெறலாம்.

click me!