
ஆன்மீகமும் அறிவியலும் கலந்தது தான் அன்றாட வாழ்க்கை. நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் கஷ்டம் நஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். இதற்கு பரிகாரமாக நாள்தோறும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறோம். இறைவனை எப்படி எல்லாம் வழிபட வேண்டும் என்பது குறித்து நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் தான் சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம் ஆத்ம நிவேதனம் ஆகியவை ஆகும். இந்த 9 வழிகாட்டு முறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இதில் முதலில் நாம் பார்க்க இருப்பது சிரவணம்.
சிரவணம் (இறைவனின் புகழைக் கேட்டல்)
இதில் முதலில் நாம் பார்க்க இருப்பது சிரவணம். சிரவணம் என்றால் கேட்டல் என்று அர்த்தம். அதாவது நாள்தோறும் இறைவனின் புகழைக் கேட்டு கேட்டு அதன் வசமாதலை குறிப்பதாகும். இதைத்தான் திருவள்ளுவர் ”செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்று திருக்குறளில் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்து நாம் பார்க்க இருப்பது கீர்த்தனம்.
கீர்த்தனம் (இறைவனைப் பாடிப் புகழ்தல்)
கீர்த்தனம் என்றால் பாடுதல் என்று பொருள் படும். நாள்தோறும் இறைவனை பாடி வழிபடுதல் இந்த முறையாகும். பாடி பாடி இறைவன் வசம் அடைந்தவர்கள் எத்தனையோ பேர். இறைவனை முழுமையாக சரண் அடைய இந்த வழிபாட்டு முறையும் ஒன்றாக சொல்லப்படுகிறது.
ஸ்மரணம் (இறைவனை எப்போதும் நினைவில் கொள்ளுதல்)
அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது ஸ்மரணம். இதற்கு் நினைத்தல் என்ற பொருள்படும். இது எளிமையாக இருந்தாலும் ரொம்பவே கஷ்டம் தான். இதற்கு மன ஒருமைப்பாடும் முக்கிய பங்கு வைக்கிறது. நாள்தோறும் இதே சிந்தனையில் இருப்பதே இதன் அர்த்தம். எந்த ஒரு காரியம் செய்து கொண்டு இருந்தாலும் மனிதர்கள் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதை ஒரு மேலான நிலையாகும். ஆனால் இது எல்லோராலும் சாத்தியமற்றது. எவர் ஒருவர் தனது மனதை கட்டுப்படுத்தி இறைவன் சிந்தனையில் இருக்கிறாரோ அவரால் மட்டுமே இறைவனை சரணடைய முடியும்.
பாதசேவனம் (இறைவனின் திருவடிகளைப் பணிதல்)
அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது பாதசேவனம். அப்படி என்றால் திருவடி தொழுதல் என்று பொருள்படும். இறைவனின் திருவடிகளை தொழுவது நான்காவது வழிபாட்டு முறையாகும். இதில் 12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் இறைவனது திருவடிகளை பற்றி கொண்டு தொழுதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனம் (மலர்களால் போற்றி வழிபடுதல்):
அடுத்த வழிபாட்டு முறை என்றால் அது அர்ச்சனம். இதற்கு பூஜித்தல் என்று அர்த்தம். இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருந்தாலும் எப்படி வேண்டுமானாலும் பூஜித்தாலும் இறைவனை மனமுருகி வேண்டிக்கொண்டால் இறைவன் நாம் செய்யும் பூஜையை மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்று நாம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
வந்தனம் (இறைவனை வணங்குதல்/நமஸ்கரித்தல்)
வந்தனம் என்றால் அதற்கு இறைவனை வணங்குதல் என்று பொருள். பொதுவாக யாராக இருந்தாலும் வணங்குதல், பூஜிப்பது, திருவடி தொழுதல் இந்த மூன்றையும் ஒன்றாக எண்ணிக் கொள்வார்கள். இவற்றிற்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இந்த இடத்தில் வந்தனம் என்றால் தலை வணங்குதல் என்று பொருள் கொண்டால் நன்றாக இருக்கும். இதற்கு காரணம் பூஜித்தல் மற்றும் திருவடி தொழுதல் இந்த இரண்டிலும் இறைவனை வேண்டிக் கொள்வதும், பக்தியும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த இறைவனை வணங்குதலில் நான் என்ற அகங்காரம் அழிக்கப்பெற்று இறைவன் ஒருவனே என்று தலை வணங்கி அவரை தொழுவதை குறிக்கிறது.