பாலியல் குற்றவாளிகளுக்கான சவுக்கடியா?....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 29, 2020, 6:49 AM IST

முதன் முறையாக ஆன்லைன் தளத்தில் வெளியாகி இருக்கும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மக்கள் மனதை வென்றதா? வாங்க பார்க்கலாம்... 


சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில்,ஜோதிகா, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். இன்று ஆன்லைன் தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம்... 

Tap to resize

Latest Videos

படத்தின் கதை... 

2004ம் ஆண்டு ஊட்டியில் 5 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்படுகின்றனர். மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் வடமாநில சைக்கோ கொலையாளி ஆன ஜோதி என்ற பெண் தான் குழந்தைகளை கடத்தி கொன்றதாக குற்றச்சாட்டப்படுகிறாள். ஜோதி ஒரு பெண் குழந்தையை கடத்திச் சென்றதாகவும், அதை தடுக்க முயன்ற 2 இளைஞர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஜோதி என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்படுகிறார். 

சைக்கோ கொலையாளி என்று சித்தரிக்கப்படும் ஜோதி நிரபராதி தான் என பாக்யராஜ் அந்த வழக்கை மீண்டும் நடந்துகிறார். அதில் வழக்கறிஞராக ஆஜராகிறார் பாக்யராஜின் மகளான வெண்பா (ஜோதிகா).“பச்ச புள்ளைங்கள கழுத்தறுத்து கொன்ன பொம்பளைக்கு வக்காலத்து வாங்குறியே இது அயோக்கியத் தனமா தெரியல” என பாக்யராஜை பார்த்து பாண்டியராஜன் கேட்கும் ஒரு கேள்வியிலேயே தெரிந்து விடுகிறது. அந்த வழக்கின் மீது மக்களுக்கு இருக்கும் ஆவேசம்.

தனது முதல் வழக்கான ஜோதி கேஸில் ஆஜராக வரும் ஜோதிகாவிற்கு எதிர்ப்புகள் வலுக்கிறது. சாட்சியங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் இந்த வழக்கில் குற்றவாளி என்று கூறப்படும் ஜோதியின் மகள் தான், நான் என்பதை ஜோதிகா சொல்கிறார். இந்த வழக்கில் அடுத்தக்கட்ட என்ன?, ஜோதிகா உண்மையை வெளிக்கொண்டு வந்தாரா? என்பதே படத்தின் இறுதிக்கட்டம்.

முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு... 

திருமணத்திற்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள ஜோதிகா நடிப்பில் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்தால் போதும் என்று இல்லாமல் சமூகத்திற்கு தன்னால் ஆன நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

முதன் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ள ஜோதிகா நடிப்பில் அசத்தியுள்ளார். முதல் நாள் ஒழிக, ஒழிக கோஷத்துடன் கோர்ட்டிற்குள் வரும் வெண்பா மீது ஒரு பெண் செருப்பை வீசுகிறாள். அதை எடுத்துச் சென்று “ஒரு செருப்புடன் எப்படி வெளியே போவீங்க” என்று திருப்பி கொடுக்க, அந்த பெண் தலைகுனியும் காட்சியிலேயே தன்னை நிரூபித்துவிட்டார் ஜோதிகா. 

அதிகாரம், கெளரவம், அரசியல் செல்வாக்கு கொண்ட பெரிய மனிதராக தியாகராஜன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜோதிகாவின் அப்பாவாகவும் பெட்டிஷன் பெத்தராஜாகவும் பாக்யராஜ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். 

பிரபல கிரிமினல் லாயரான பார்த்திபன், அரசு வழக்கறிஞராக களம் இறங்கியது முதலே படம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. தனது வழக்கமான நக்கல், நையாண்டிகளில் இருந்து மாறுபட்ட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தை பற்றிய விமர்சனம்... 

மேலோட்டமாக பார்த்தால் குழந்தைகளை கொன்ற சைக்கோ கொலையாளிக்கு ஏன் ஜோதிகா வக்காலத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழுகிறது. சமூகத்தில் பெரிய மனிதரான தியாகராஜன், பார்த்திபனை இந்த வழக்கிற்காக ஆஜராக சொல்லும் போதே, ஓ.கே. அப்போ பெரிசா ஏதோ இருக்கு என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வெண்பா தான் சைக்கோ கொலையாளி ஜோதியின் மகள் என்று தெரியும் போது மேலும் ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. 

“பையன் ஆச்சே அதனால் தான் அவன் செஞ்ச பாவத்திற்கும் சேர்ந்து நான் கையை கழுவிக்கிட்டு இருக்கேன்”. “இந்த ஊர் முழுக்க எனக்கு இருக்குற பெயர் உனக்கு தெரியும் இல்ல... சாகுற வரைக்கும் அந்த கெளரவத்திற்கு எந்த கெட்டப்பெயரும் வந்திட கூடாதுன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... வாழ்ந்துட்டு தான் போவேன்” என்று அழுத்தமான குரலில் தியாகராஜன் பேசும் வசனங்கள், நமக்கு சொல்லாமல் பல விஷயங்களை புரியவைத்துவிடுகிறது.

நீதிமன்றத்தில் ஜோதிகா ஆஜராகும் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. வழக்கமான சினிமாவில் காட்டப்படும் கோர்ட் சீன்களைப் போல் அல்லாமல், அமைதியாக சலனமில்லா நதி போல் காட்சிகள் நம்மை மூழ்கடிக்கிறது. அதே சமயம் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லை. 

குற்றவாளிகள் கிடைக்காத வழக்குகளை முடிக்க வடநாட்டவரின் சதி என்று சொல்லி வழக்கை முடிக்கும் சில போலீசாரும் இருக்கிறார்கள்... என கோர்ட்டில் ஜோதிகா பேசுவது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம், எந்த குழந்தையும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லப்போவதில்லை என்ற எண்ணமும், பெண் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோர், தங்களது ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதும் முக்கியம் என்ற கருத்தை அறிமுக இயக்குநரான ஜே.ஜே.பெட்ரிக் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

யாருமே எதிர்பார்க்காத வகையில் இறுதியில் காத்திருக்கும் டுவிஸ்ட் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்துகிறது. வலியோடு கடக்கும் அந்த இறுதிக்கட்ட காட்சிகள் கண்டிப்பாக படம் பார்க்கும் அனைவரையும் கலங்கடிக்கும்... 

பண பலமும், அரசியல் பலமும் கொண்ட பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான சவுக்கடியாக வந்திருக்கிறாள்... இந்த பொன்மகள் வந்தாள்....! 

click me!