புதுவையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் வாங்கப்பட்ட பிரியாணியில் கறி துண்டுடன் சேர்த்து கம்பி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி 45 அடி சாலையில் பிரபல பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிரியாணி வாங்க, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் வந்துள்ளார். அப்போது அவருக்கு கொடுக்கபட்ட பிரியாணியில் கறியுடன் சேர்த்து கம்பி ஒன்று இருந்துள்ளது. இது தொடர்பாக நேரடியாக கடைக்குச் சென்று முறையிட்ட வாடிக்கையாளர் புகாருக்கு முறையாக பதில் அளிக்காததால் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பிரியாணியில் பாத்திரம் கழுவும் கம்பி ஒன்று, கிடப்பதாக அவர் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். பிரியாணியில் கம்பி கிடப்பது குறித்து கடை உரிமையாளர் தெரிவித்த போது அவர்கள் முதலில் மறுத்ததாகவும், சரியான பதில் அளிக்கவில்லை என்றும், இது குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் செய்ய இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த கடையில் வாங்கிய பிரியாணியில் புழுக்கள் இருந்ததாக புகார் வெளியானதை அடுத்து கடை உரிமையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்த கடை பிரியாணியில் பாத்திரம் விளக்கும் கம்பி கிடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளதால் புதுவையில் பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.