Maridhas: அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமியை அரெஸ்ட் பண்ணணும்.. ஆட்டத்தை ஆரம்பித்த மாரிதாஸ்

By manimegalai aFirst Published Jan 18, 2022, 7:56 PM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடந்துள்ளதால், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி இருவரையும் மத்திய அரசு கைது செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என்று மாரிதாஸ் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடந்துள்ளதால், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி இருவரையும் மத்திய அரசு கைது செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என்று மாரிதாஸ் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

யுடியூபர்களில் பிரபலமானவர் மாரிதாஸ். அதிலும் திமுகவுக்கு என்றால் இவர் வேப்பங்காய். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே திமுகவையும், அதன் தொண்டர்களையும் விடாது விமர்சித்து வருபவர். இப்போதும் அதே பாணியை விடாமல் செய்து வருகிறார்.

பாஜக ஆதரவாளரான இவர் தினசரி வெள்ளை போர்டு உடன் ஆஜராகி திமுகவை குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியவர். தொடர் விமர்சனங்கள் வினையாக மாற கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது  நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.

சில நாட்கள் அமைதியாக இருந்த மாரிதாஸ் தற்போது மீண்டும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார். அதிலும் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டு இருப்பது தமிழக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி இருவரையும் மத்திய அரசு கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவை போட்டுள்ளார்.

அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

 

https://twitter.com/MaridhasAnswers/status/1483334229950083074

செய்தி : பொங்கல் பரிசுத் தொகுப்பு: ``மிளகு'னு சொல்லிட்டு இலவம்பஞ்சு கொட்டைய தர்றாங்க..." - கொதிக்கும் மக்கள்!

அமைச்சர் சக்கரபாணி, அமைச்சர் பெரியசாமி இருவரையும் மத்திய அரசு கைது செய்து விசாரனையை தொடங்க வேண்டும். ஊழல் என்பதை தாண்டி உணவு கலப்படம் வரை ஒரு பெரும் கொள்ளை நடந்துள்ளது என்று தமது பதிவில் மாரிதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த குளறுபடிகள் பற்றிய செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. 100 கிராம் மிளகு பாக்கெட்டில் பருத்தி கொட்டை கலக்கப்பட்டு இருக்கிறது. மஞ்சள், மிளகாய், சீரகம் பாக்கெட்டுகளில் மரத்தூள் கலந்து இருக்கிறது என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே வருகின்றன.

அண்மையில் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் மோட்டூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக உள்ளதாக பொதுமக்கள் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

"

அந்த வீடியோவில் அரசு சார்பில் தரப்பட்டு உள்ள பொங்கல் தொகுப்பை பிரித்து அதில் உள்ள பொருட்களை எடுத்து காட்டுகின்றனர். மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை காட்டி மரத்தூள் உள்ளது, இதை எப்படி குழந்தைகளுக்கு தருவது என்று கேள்வி எழுப்பி தமிழக அரசை வசைமாரி பொழிந்து தள்ளி இருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் கடந்த 4ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கிய நாள் முதல் அதில் உள்ள பொருட்கள் தரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்தே சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுத்து தவறு எங்கே ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது..!!

click me!