முதல்வர் வீட்டுக்கு ஓடிபோய் பார்த்த விஜயகாந்த்.. சி.எம் கொடுத்த பதில்.. ஏமார்ந்த கேப்டன்.. உடைக்கு Ex MLA.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 6:40 PM IST
Highlights

அப்போது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்த மண்டபத்திற்கு அருகில் ஏழு கிரவுண்ட் இடம் இருக்கிறது அதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள், மண்டபத்தை விட்டு விடுங்கள் என்று கோரினார். 

விஜயகாந்த் தனது திருமண மண்டபத்தை பாதுகாக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் இல்லை, குறிப்பாக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வீடு தேடி சென்று அவரை சந்தித்தும், கருணாநிதி அவர்கள் நெடுஞ்சாலைத்துறை தன்னிடம் இல்லை என கைவிரித்ததால் விஜயகாந்த் ஏமாற்றத்துடன் திரும்பினார் என தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி கூறியுள்ளார். ஆனால் அன்று கருணாநிதி நினைத்திருந்தால் அதை இடிக்காமல் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிவப்பாக இருந்தால் தான் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்து, தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். ஸ்டைலில் ரஜினியும், ஜனரஞ்சக நடிப்பில் கமலும் கதாநாயகன்களாக வலம்வந்த நிலையில், இயல்பான பேச்சாலும், நடிப்பாலும் சமூக கருத்தாலும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். வெளிப்படையானவர், வெள்ளந்தி மனிதர், உதவும் குணம் கொண்டவர் என பலபல  அடையாளங்கள் அவருக்கு உண்டு.தமிழக மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட கலைஞனாக வளர்ந்த விஜயகாந்துக்கு, தனது நெருங்கிய நண்பர்களால் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு அது தமிழகம் முழுவதும் பரவியது. 2001 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்றிருந்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புகள் அவர் முழு நேர அரசியலில் குதிக்கும் சூழலை உருவாக்கியது. அவர் அரசியல் தொடங்க எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், விஜயகாந்த் தனது பெற்றோரின் நினைவாக கோயம்பேட்டில் கட்டிய ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் இடிக்கப்பட்டது முக்கிய காரணமாக மாறிப்போனது என பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. 

கோயம்பேடு  மேம்பாலம்  கட்டுவதற்காக அவரது மண்டபம் இடிக்கப்பட்டது. மண்டபத்தை இடிக்காமல் பாலத்தை அமைக்க மாற்று திட்டத்தை அவர் வழங்கிய போதும் அதை ஏற்காமல் அப்போதைய திமுகவினர் அரசியல் செய்ததுதான், அவர் அரசியல் கட்சி தொடங்க காரணமாக அமைந்தது என்று அவர் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மண்டபம்தான் தற்போது தேமுதிக கட்சி தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. காலமும் சூழலும் விஜயகாந்தை அரசியல் களத்துக்கு  இழுக்க, ஜெயலலிதா கருணாநிதி என்ற மாபெரும் ஆளுமைகள் கோலோச்சிய காலத்திலேயே அரசியல் கட்சி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்தார் விஜயகாந்த். பின்னர் உடல் நலிவுற்ற நிலையில் தேமுதிகவும் பல தோல்விகளை சந்தித்து முடங்கிப் போயுள்ளது. விஜயகாந்த் ரசிகர் மன்றம் துவக்கியது முதல் அவர் அரசியல் கட்சி தொடங்கியது வரை சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்து இப்போதும் அவரோடு இருந்துவரும் தேமுதிக எக்ஸ் எம்எல்ஏ பார்த்தசாரதி விஜயகாந்தின்   திரைப் பயணம் தொடங்கி அரசியலில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் நடிகர் அரசியல்வாதி விஜயகாந்த் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- விஜயகாந்த் நடிக்க வந்த பிறகுதான் படப்பிடிப்பு தளங்களில் ஊழியர்களுக்கு முதல்முறையாக மட்டன், சிக்கன்  சாப்பாடு கொடுக்கப்பட்டது, அதற்கு முன்பு வரை தயிர் சாதம், சாம்பார் சாதம் மட்டும்தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு உணவு வழங்குவதிலும் விஜயகாந்த அதிக அக்கறை நிறைந்தவர் ஆவார். வெளியூரில் இருந்து சென்னைக்கு நடிகர்களை பார்க்கவோ அல்லது நடிக்கும் ஆர்வத்தில் பலர் வருவது வழக்கம், அப்படி  வருபவர்கள் திரும்பிச் செல்ல பணம் இல்லாமலும், உணவு இல்லாமல் தவிக்கும் போது அவர்கள் தேடி நாடி வரும் ஒரே இடம் கேப்டன் விஜயகாந்தின் வீடு அல்லது அவரின் அலுவலகமாகத்தான் இருக்கும்.  அப்படி வருபவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களுக்கு பயணத்திற்கு காசு கொடுத்து செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்ப கூடியவர் விஜயகாந்த்.

அந்த அளவுக்கு கொடை உள்ளம் படைத்தவர் ஆவர். நடிகர் ரஜினிகாந்த் அவர்களே பலமுறை சினிமா துறையில் என்னை வெற்றி பெறக்கூடிய ஒருவர் உண்டென்றால் அது விஜயகாந்த் தான் என  பாராட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு  விஜயகாந்த் தன் கொடை உள்ளதால் பலரையும் கவர்ந்தவர் ஆவார். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்வது, ஈழத்தமிழர் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என எதுவாக இருந்தாலும் முன்னணியில் இருப்பவர் விஜயகாந்த்தான். இது எல்லா நடிகர்களுக்கும் தெரியும், இதேபோல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது எப்போது என்றால் கடந்த 2004ஆம் ஆண்டு விஜயகாந்த் கள்ளக்குறிச்சியில் ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்தார் அங்கு விஜயகாந்தின் ரசிகர் மன்ற கொடி கம்பங்களை பாமகவினர் வெட்டி சாய்த்தனர். அப்போது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. விஜயகாந்துக்காக எழுச்சிமிகு போராட்டங்களை ரசிகர் மன்றம் நடத்தியது. அதுதான் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க ஒரு உந்து சக்தியாக இருந்தது. 

அதன்பிறகுதான்  கோயம்பேட்டில் உள்ள அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது, மேம்பாலம் கட்டுவதற்காக  இடிப்பதாக கூறினர், அப்போது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்த மண்டபத்திற்கு அருகில் ஏழு கிரவுண்ட் இடம் இருக்கிறது அதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள், மண்டபத்தை விட்டு விடுங்கள் என்று கோரினார். ஏனென்றால் பலரும் மண்டபத்தில் திருமணம் செய்து வருகின்றனர், இது மக்களுக்கு தேவைப்படுகிறது என்றார், அப்போதைய முதல்வர் கருணாநிதியும்கூட இந்த மண்டபத்திற்கு வந்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில்தான் கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று விஜயகாந்த் சந்தித்தார். அதற்கு நெடுஞ்சாலைத்துறை என்னிடத்தில் இல்லை என கருணாநிதி கூறிவிட்டார். அப்போது நெடுஞ்சாலைத்துறை டி.ஆர் பாலுவிடம் இருந்தது. கருணாநிதி நினைத்திருந்தால் மண்டபம் இடிக்கப்படுவதை தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் சொன்ன பதிலால் விஜயகாந்த் திரும்பி வந்துவிட்டார். விஜயகாந்த் அரசியல் தீவிரமாக இறங்கப் போகிறார் என்று தெரிந்துதான் அவரை பழிவாங்கும் நடவடிக்கையில் அப்படி நடந்து கொண்டார்கள். இவ்வாறு அந்த பேட்டியில் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
 

click me!