மீண்டும் பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை..!! குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்.. கதறும் தவ்ஹீத் ஜமாத்.

By Ezhilarasan BabuFirst Published Dec 19, 2020, 1:40 PM IST
Highlights

அடித்துக் கொலை செய்துவிட்டு பிறகு மாட்டை திருடியதாக இஸ்லாமியர் மீது குற்றம் சாட்டுவது வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்களும் சட்டங்களும் இப்படி தனிநபர் கைகளுக்குச் சென்று விட்டால் வன்முறைகள் அதிகமாகிக் கொண்டே செல்லும் என்பதை ஆளும் அரசுகள் உணர வேண்டும்.

மீண்டும் பசுவின் பெயரால் கொலை அரங்கேறி உள்ளதாகவும், கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமெனவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து  அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மத்திய பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து பசு பாதுகாப்பு என்ற பெயரில், வன்முறையில் ஈடுபடும் கும்பல்களின் அராஜகம் அதிகரித் துள்ளது. பசு பாதுகாப்பு குண்டர்களின் வன்முறைக்கு எதிராக புகார்  அளித்தாலும் காவல்துறை மற்றும் அரசு தரப்பிலிருந்து எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது பீகார் மாநிலத்தில் பசுமாட்டை திருடியதாக இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த வன்முறைச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. 

பீகார் மாநிலம் பாட்னா ஃபுல்வாரிஷரிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் முகம்மது ஆலம்கீர், இவரை அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீகாந்த் ராய் என்பவர் தனது கால்நடை கொட்டகையில் இருந்து மாடுகளை திருட முயன்றதாக பிடித்து தாக்கியுள்ளார். காவல்துறைக்கு எந்த தகவலும் கொடுக்காமல் ஸ்ரீகாந்த்  ராயின் ஊரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த முகம்மது ஆலம்கீர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த போலீசார், ஆலம் கீரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அடித்துக் கொலை செய்துவிட்டு பிறகு மாட்டை திருடியதாக இஸ்லாமியர் மீது குற்றம் சாட்டுவது வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்களும் சட்டங்களும் இப்படி தனிநபர் கைகளுக்குச் சென்று விட்டால் வன்முறைகள் அதிகமாகிக் கொண்டே செல்லும் என்பதை ஆளும் அரசுகள் உணர வேண்டும். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை விதித்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

click me!