உங்கள் ஒற்றுமையும் அன்பு மட்டுமே வேண்டும்.. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா மீண்டும் அதகளம்.!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 11:22 PM IST
Highlights

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் பொன்னாடை, நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும் என்றும் உங்கள் அனைவரது ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீட்டே தீருவேன் என்று அதிமுக பொன் விழா நாளான அக்டோபர் 17 முதல் அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார் சசிகலா. தீபாவளிக்கு முன்பாக தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொண்டார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்த்தெடுக்கபட்ட ஒரு இயக்கம் ஆகும், ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம்.  அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவரது ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும். உங்களையெல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்.  பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க... புரட்சித் தலைவர் நாமம் வாழ்க... புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க... வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். வளர்க தமிழகம்” என்று அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.

click me!