
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாளையும், சட்டமன்றத்தில் 60 ஆண்டுகால மக்கள் பணியையைும் கொண்டாடும் விதமாக திமுக சார்பில் வரும் ஜுன் 3 ஆம் தேதி வைர விழா நடத்தப்படுகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் வைர விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த கழக உடன்பிறப்புகள் களப் பணியாற்றி வருகின்றனர்.
இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வைரவிழாவுக்கு இன்னும் 4 தினங்களே எஞ்சியுள்ள நிலையில், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.wishthalaivar.com இதனை செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாலைசூடியபடி எம்.ஜி.ஆர். உடன் கருணாநிதி இருக்கும் வீடியோவும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.