படேல் மைதானத்துக்கு கூச்சமில்லாமல் உங்க பெயரை வைத்தீர்களே... பிரதமர் மோடிக்கு எதிராக ஜோதிமணி காட்டம்!

By Asianet TamilFirst Published Aug 6, 2021, 10:43 PM IST
Highlights

ராஜீவ் காந்தியின் புகழை மோடியின் அற்ப அரசியலால் ஒன்றும் செய்ய முடியாது என்று கரூர் எம்.பி. ஜோதிமணி காட்டமாகப் பவிட்டுள்ளார்.
 

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கடந்த 1991 - 1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு அவருடைய பெயரில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. இந்த பெயரிலான முதல் விருதை தமிழகத்தைச் சேர்ந்த தலை சிறந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். பின்னர் இந்தியாவின் பல ஜாம்பவான் வீரர், வீராங்கனைகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, இந்திய ஹாக்கியின் பிதாமகன் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அந்தப் பதிவில், “கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தியான் சந்த் பெயரிட வேண்டும் என்று நாடு முழுவதும் பல கோரிக்கைகள் எனக்கு வந்தன. அவர்கள் உணர்வை மதித்து கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து கரூர்  நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “குஜராத்தில் மாபெரும் தலைவர் சர்தார் படேலின் பெயரில் இருந்த விளையாட்டு மைதானத்திற்கு கூச்சமில்லாமல் தனது பெயரை வைத்துக்கொண்டவர் மோடி. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் விளையாட்டு விருது இருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அநாகரிக அரசியல் பாஜகவுக்குப் புதிதல்ல.
இந்தியாவில் ஒவ்வொரு மனிதரிடமும்  தொலைபேசி/அலைபேசி இருக்கும்வரை, கணிணி இருக்கும் வரை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீடு இருக்கும்வரை, நவீன இந்தியா இருக்கும் வரை எமது தலைவர் ராஜீவ் காந்தியின் புகழ் நிலைத்திருக்கும். மோடியின் அற்ப அரசியலால் அதை ஒன்றும் செய்ய முடியாது.” என்று காட்டமாக ஜோதிமணி பவிட்டுள்ளார்.

click me!