தாய்மையை ஆபாசமாகப் பேசியது மோசமான தேர்தல் விதி மீறல்... ஆ.ராசாவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

By Asianet TamilFirst Published Mar 31, 2021, 9:21 AM IST
Highlights

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றி ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், இன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி  திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்தவர் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையாகவும் தமிழக பெண்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. முதல்வரைப் பற்றிய இந்த அருவருப்பான பேச்சால் ஆ.ராசா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணைய செயலாளர் சார்பில் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், “தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. கட்சிகளும் வேட்பாளர்களும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மற்றும் அவரது பொதுவாழ்க்கைக்கு சம்பந்தப்படாத செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கக் கூடாது என்பது அதில் ஒரு விதியாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது. ஆயிரம்விளக்கு தொகுதியில் 26-ந் தேதி பிரசாரம் செய்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் (ஆ.ராசா) அவதூறாக பேசியதாக புகார் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் பெறப்பட்டுள்ளது. அதில், உங்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய இந்தப் பேச்சை ஆராய்ந்ததில், நீங்கள் அவதூறாக மட்டும் பேசவில்லை. ஆபாசமாகவும் ஒரு பெண்ணின் தாய்மையைக் குறைத்தும் பேசி தேர்தல் நடத்தை விதிகளை மிக மோசமாக மீறியிருக்கிறீர்கள். எனவே, நீங்கள் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், இது பற்றி மேற்கொண்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.” என்று அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!